Friday, December 29, 2006

இங்க கொஞ்சம் கேளுங்க – 3

பட்டணம் வந்து சேந்த பொறவு
பட்டாளம் சேர போனேனே

பணத்த சேத்து காத்துகிட்டா
சிங்காரியோட இருப்பேனே

ஓடி ஓடி உழைச்சாலுமே
உடம்பு வலி தெரியலியே

எங்கண்ணுக்குள்ள வாரவள
நெனச்சு மனசு தாங்கலியே

ஆத்தா பின்னே ஒளிஞ்சு நின்னு
நீ முழிச்சு பாத்த பார்வையில

அத்தான் நானேன்னு ஏத்துகிட்டு
வெக்கப்பட்ட சிவத்தபுள்ள

எம்.சி.ஆரு படத்தப் பாத்துபுட்டு
துள்ளி குதிச்ச என் செல்லம்மா

குருவிங்களோட ஓடுனயே
என் கண்ணான கண்ணம்மா

பச்சப்புடவ கொசுவம் கட்டி
பாட்டு கேட்ட வெகுளிப்புள்ள

பட்டு பட்டுன்னு பேசிபேசி
பட்டாசா பொரிஞ்ச புள்ள

கலங்கி குலுங்கி அழுதநேரம்
என் நெஞ்சுக்குள்ள வேகுதடி

உன்ன விட்டு பிரிஞ்ச சோகம்
சுண்ணாம்பா எரிக்குதடி

நீ சிரிச்ச சிரிப்பு எங்காதுக்குள்ள
சுத்தி சுத்தி போகுதடி

கண்ண மூடி நா படுக்கயில
கண்ணீரத்தான் சிந்துதடி

ஒசரமான உன் நெனப்பு
வந்து வந்து போகுதடி

உன் சாந்து பொட்டு மொகத்த காண
நெஞ்சு ஏனோ ஏங்குதடி

கேள்வி ஒன்னு மனசுக்குள்ள
உம் மாமனத்தான் நினக்கிறியோ

வெவரம் புரியாத அழகுபொண்ணே
எனக்காகவே நீ காத்திருப்பியோ

இங்க கொஞ்சம் கேளுங்க - 2

ரோசா நானு ராசா நீயின்னு
சொல்லி சொல்லி மாஞ்சியேடா

என் கன்னங்குழி மயக்கத்தில
சொக்கி போயி நின்னயேடா

தலல குட்டி கவித படிச்ச
மொழி தெரியாம நா முழிக்கயில

கஞ்சி தண்ணி ஊத்தினயே
நா சுரம் வந்து அனத்தயில

சோறு தண்ணி இறங்காம
நானு இங்க தவிக்கேனே

பொங்கி போட நானொருத்தி
காத்து காத்து நிக்கேனே

கொஞ்ச கெஞ்ச நா இருக்க
வேற புள்ள நெனச்சீயோ

கண்ணீருல நாந்தவிக்க
கை கழுவி விட்டீயோ

வெட்டிப் பேச்சு பேசுரேன்னு
வெட்டிவிட்டு போயிட்டீயோ

அன்பு காட்ட நாயிருக்க
வேற அன்பதான் கண்டீயோ

கோபமில்ல நீ என் உசிரு இல்ல
சேதி சொல்ல தோழியில்ல

மூஞ்சி தூக்க மனசில்ல
நீயும் இங்க வருகயில

பொங்கல் வர போகுதய்யா
உன் முகத்த எனக்கு காட்டுவியா

கண்ணாலம் கட்ட மனசில்லயா
இல்ல என்னத்தான் பிடிக்கலயா

இங்க கொஞ்சம் கேளுங்க

சின்னச் சின்ன புள்ளிவச்சு
சிக்கனமா கோடு போட்டேன்

வண்ண வண்ண நிறங்களவச்சு
வண்ணமய கோலம் போட்டேன்

சைக்கிள்ல போற நேரத்தில
சிவப்பி என்னத்தான் பாத்தாயே

கண்டாங்கி சேலக் கட்டி
கன்னமெல்லாம் சிவக்க நின்னேன்

வெள்ள சிரிப்பு நா சிரிக்க
கண்ணிமைக்க மறந்தாயே

வரப்புக்குள்ள கைகோத்து
வேலைக்குத்தான் போனோமே

தூக்குவாளி சோத்தை எடுத்து
என் கையால உனக்கு தந்தேனே

வேப்பெண்ண தடவியே நானும்
தலசிவி கனகாம்பரம் வெச்சேனே

அழகு நானேன்னு சொல்லிகிட்டே
தலசுத்தி கண்திருஷ்டி எடுத்தாயே

குடிலசக்குள்ள நா நிக்க
வெளிய நின்னு தண்ணி குடிச்ச

பக்குவமா உம் மனசதான்
எங்கிட்டயும் சொல்லிபுட்ட

பொட்டப்புள்ள நா குனிய
சம்மதமுன்னு எடுத்துகிட்ட

எங்கண்ணுக்குள்ள நீ இருக்க
மைவைச்சு அழகு பாத்தேன்

பட்டணத்துல வேலக்குதான
போகணுமின்னு சொல்லிப்புட்ட

உன்ன பாக்காத நேரத்துல
மைகரைஞ்சு நா அழுதேன்

மைலு மைலா நடந்தே தெனமும்
உன் வரவுக்குதான் காத்திருக்கேன்

பட்டணத்து அழகிகள கண்டு
மயங்கியே என்ன மறந்தீயோ

மங்களமா உனக்கு புடுச்ச
மஞ்சள தேச்சு நானும் நிக்கேன்

என் பாட்டு காத்துல விட்டேனே
எசப்பாட்டு பாட மறந்தாயோ

நெஞ்சுக்குள்ள உன்ன வச்சேன் ராசா
இந்த ராசாத்திய விட்டுட்டீயோ

உன் பிரிவு என்ன வருத்த
வொலகமே சோகமா இருக்கோ

என் உசிர எடுத்து போனவனே
இந்த பிணத்த பாக்க வருவாயோ

Wednesday, December 06, 2006

நட்பு

அம்மையாய் வலியைத் தாங்கி
ஆதரவு தந்து ஊக்குவித்து
இன்பம்தனை பகிர்ந்து கொண்டு
ஈவிரக்கத்துடன் துக்கத்தில் பங்கெடுத்து
உரிமையுடன் கை கோர்த்து
ஊமையாகவே கதைகள் பலபேசி
எதிர்ப்பார்ப்பின்றி அன்பு சொரிந்து
ஏமாற்றங்களை தடவிக் கொடுத்து
ஐயமின்றி எண்ணங்களை சீர்திருத்தி
ஒற்றுமையாய் வாழ்நாளை கழித்து
ஓசையின்றி இயற்கையை ரசித்து
ஔவையைப் போல் வழிகாட்டி
அஃதே சேர்ந்திருப்பதாம் நட்பு

Saturday, December 02, 2006

மழை

புன்னகைப் பூத்த வானம்
பூப்பூவாய் வெண் மலர்களை
பூரித்து தூவ வேண்டியே
பூமியின் இறைஞ்சலை ஏற்று
மேகமாய் மிதக்கும் சிசுக்களை
வேகமாய் கனிவுடன் அழைத்து
கருநிறம் பூசிய கர்ப்பிணியாய்
வேடமிட்டு சிரிக்க வைத்தானாம்

உடல் குலுங்க சிரித்தவுடன்
தண்ணீர் குழந்தைகளாய் தூவிய
மழைத் துளிகளை அகப்படுத்தி
மனமகிழ்ந்து மணம் பரப்பி
சலங்கை கட்டிய நாட்டியத்தின்
அபிநய சந்தத்தின் சத்தத்துடன்
ஆட வைத்தே நெகிழ்ந்தாளாம்
பூமி என்னும் அன்னை

என் கவிதை

மயிலாய் ஒயிலாய் நடந்து
மணலாய் வெறுமையாய் விரிந்து
மலையாய் மெளனமாய் நின்று
மழையாய் அழகாய் பொழிந்து
மலராய் மணமாய் கமழ்ந்து
மரமாய் பசுமையாய் சிலிர்த்து
மணியாய் அருமையாய் சிரித்து
மகவாய் மிகவாய் மகிழ்ந்து
மகிழும் இளமை இயற்கையே

கல்லாய் கனியாய் இறுகி
கன்றாய் கண்ணீராய் தவித்து
காற்றாய் சடுதியில் கலந்து
கயிலையில் பனியாய் உறைந்த
கடவுளாய் காட்சி தந்தாலும்
கண்கொண்டு காண முடியாமல்
களிப்புடன் ஒளிந்தே விளையாடும்
கண்ணனாம் உன்னையே நினைத்து
காத்திருக்கும் தருணங்களில் தேடலில்
கவிதையாய் எழுதிய இவ்வரிகளே
கண்சிமிட்டி கைகொட்டி என்னைக்
கண்டே ஏளனமாய் சிரிக்கின்றனவோ

Saturday, November 25, 2006

என் கண்ணனை கண்டீரோ

காலையும் மாலையும் வானத்தை சிவக்க செய்யும் ஆதித்யனின் உறவிலே
பரந்து விரிந்த கடலரசனும் மெய் மறந்து நிற்கின்ற வேளையிலே
கடலும் தன் அங்கமான நீரை சிறிது சிறிதாக தொலைக்கும் தருணத்திலே
அவை மேலெழும்பி நடு வானத்தில் கார்மேகமாய் மாறிவிட்ட நேரத்திலே
என் கண்ணனின் நிறத்தை ஒத்ததனால் ஏற்பட்ட பெருமையினாலே
என் கண்கள் சிரித்தன வானத்தில் மிதக்கும் அந்த மேகத்தின் செருக்கை கண்டதாலே

காற்றின் தாலாட்டிலே மேகமும் இன்னிசையோடு கானகத்தே நகர
களைத்த என் கண்களுக்கு விருந்தாக மயிலொன்றும் அங்கு வர
மழையில் நனைய போகும் மகிழ்ச்சியிலே ஆண் மயிலும் தோகை விரித்தாட
கண் கொண்ட மட்டும் கண்டு விட்டு நானும் மெய் மறந்து அதன் அழகில் லயிக்க
என் கண்ணனின் சிகையில் அமரும் பெருமையை நினைத்து மயிலும் செருக்கிலே ஆட
தவறி விழுந்த இறகொன்றை என் கைகளும் எடுத்துக் கொண்டன என் அவனுக்காக

என் பொக்கிஷத்தை கையிலேந்தி மேலும் என் கால்கள் நடக்க
கூர்மையான என் கண்களில் ஒர் ஓவியனின் தூரிகையும் பட
கண்ணிமைக்க மறந்து அவன் வண்ணக் குழைவிலே வளரும் ஓவியத்தைக் இரசிக்க
மஞ்சள் உடையணிந்த அழகு கொஞ்சும் முகம் என்னை வாவென்று அழைக்க
கலைஞனின் கால்களில் வெட்கமின்றி விழுந்து அந்த ஓவியத்தையும் நான் பெற
இடுப்பில் செருகிய மயிலிறகுடன் இதையும கட்டியணைத்து நடந்தேன் மெதுவாக

கல்லும் முள்ளும் இறகும் ஓவியமும் என் பயணத்தை கடினமாக்க
ஓய்வு வேண்டிய கால்களும் ஒரு சிறிய வீட்டின் முன் நிற்க
சிற்பியொருவன் உளியால் சிறு உருவத்தை செதுக்கும் அழகை கண்டு வியக்க
பசி மறந்து தரையில் அமர்ந்து அந்த சிற்பத்தின் முழு அழகை காண விழைய
மதி மயக்கும் புன்னகையுடன் நிற்கும் என் காதலனை அங்கும் கண்டு அதிர
சிற்பியே வலிய வந்து என் கைகளில் அவனை திணித்தான் அன்பாக

சிற்பமும் ஓவியமும் மாறி மாறி என் உணர்வுகளை அலைகழிக்க
என் செய்வேன் என்று தெரியாமல் நானும் ஒரு மூங்கில் காட்டிற்குள் நுழைய
ஓங்கி வளர்ந்த மூங்கிலை கண்டு நானும் வியப்பில் ஆழ்ந்து நிற்க
இடைச்சிறுவன் ஒருவன் சிரித்துக் கொண்டே ஒரு மூங்கில் குழாயை என் கையில் திணிக்க
என் இனிமையான இசைக்கு அகத் தூய்மையேக் காரணம் என்று புல்லாங்குழலும் தத்துவம் பேச
அறியாமையின் விளிம்பில் இருக்கும் நான் ஒன்றும் புரியாமல் நடந்தேன் அவன் நினைவாக

புல்லாங்குழலும் என் உடைமைகளுடன் சேர்ந்து சுமையைக் கூட்ட
போதாதென்று காட்டுப் பூக்களை ஆசையுடன் நான் பறித்து மாலையாக்க
எப்படி எடுத்து செல்வது இந்த மாலையை என்று விழித்து நானும் நிற்க
மூளையின் ஓரத்தில் பொறித் தட்டி அந்த மாலையை நானே சூட
அடுத்து என்ன என்று புரியாமல் கண்களும் கால்களும் கெஞ்சிக் கேட்க
இனி ஒரு அடி வைக்க இயலாத நிலையில் தடுமாறினேன் களைப்பாக

இந்த நிலையிலே பசிக் காதை அடைத்தது
தாகத்திலே நாவும் வறண்டது
தூக்கமின்மையால் கண்கள் எரிந்தன
முட்கள் பதம் பார்த்ததால் கால்களில் இரத்தம் வழிந்தது
என் மென்மையான கரங்களும் சிவந்தன
கைகள் தூக்கி வந்த களைப்பால் வலித்தன
தலை கனத்தன தோள்கள் கெஞ்சின
முதுகோ படுக்க தூண்டியது
கண்ணீர் முத்துக்கள் தெறித்தன
துக்கம் தொண்டையை அடைத்தது

அனைத்தும் அறிந்தவன் பண்பிலே உயர்ந்தவன்
அழகிலே நிகரற்றவன் வார்த்தையிலே வல்லவன்
பிறர் துன்பம் துடைக்க வருபவன் என்றார்களே
அனைவரும் பொய்யர்களோ
அவன் நெஞ்சம் கல்லால் ஆனதோ
என் அன்பு அவன் கண்களில் விழவில்லை போலும்
என்று பல மணி நேரம் அரற்றிய வேளையிலே

நறுமணம் கமழ, காற்றிலே கீதம் இசைக்க
ஜல் ஜல் என்று சலங்கை ஒலி இசையை கூட்ட
சுருண்ட கூந்தல் தென்றலில் இனிதே அசைந்தாட
உடல் முழுவதும் ஆபரணம் ஜொலிக்க
பீதாம்பரம் அணிந்த கருமேனியாய் அழகில் மிளிர
காந்த கண்களில் அன்பைத் தேக்கி
சிவந்த உதட்டில் சிரிப்பை நிறுத்தி
அருகில் வந்து கண்ணனே என் முன் நிற்க

நானும் என் கழுத்திலிருந்த மாலையை அவனுக்கு சூட்ட
பிறகு என் புல்லாங்குழலும் மயிலிறகும் அவன் உடலில் ஏற
அறிவும் அழகும் இல்லாத என்னையும் அவன் ஏற்க
என் துன்பம் அனைத்தும் சிட்டென பறக்க
மகிழ்ச்சியான அந்த நேரத்தில் ஒரு பாறையில் கைக் கோர்த்து அமர்ந்தோம்

என் கண்ணீரைத் துடைத்தான்
கைகளை ஆதரவாக தடவினான்
கால்களில் வழியும் இரத்தத்தை தன் உடையால் துடைத்தான்
ஓவியத்தையும் சிற்பத்தையும் இரசித்தான்
பழங்களையும் உண்ண வைத்தான்
கைகளால் நீரை நிரப்பி என்னை குடிக்கவும் வைத்தான்
அழுக்கான என்னை கண் கொட்டாமல் பார்த்தான்
பிறகு முத்துப்பல் தெரிய என்னைப் பார்த்து சிரித்தான்
பேதை பெண்ணே! நான் யாரென்று தெரியவில்லையா இன்னும்
என்றும் எள்ளி நகையாடினான்

ஒரு கணம் என் மாயையைதான் அகற்றினானோ
இல்லை என் சிந்தைதான் கலங்கிவிட்டதோ
புரியாமல் என் கண்களை கசக்கி விட்டுக் கொண்டேன்
அங்கே……..அங்கே…….
அவனே கார்மேகமாய் மயிலாய் ஓவியனாய்
சிற்பியாய் இடைச்சிறுவனாய் புல்லாங்குழலாய்
மலர்களாய் நீராய் மரங்களாய் நானாய் அவனாய்
மாறி மாறி காட்சியளித்தான்

புரியாமல் விழித்த என்னைப் பார்த்து விளித்தான்
அறியாமையில் மூழ்கி தவிக்கும் அன்புப் பெண்ணே!
என்னை தோழனாக ஏற்றுக் கொண்டுள்ள சகியே!
காதலில் தினமும் உருகி உன்னையே மறக்கும் என் காதலியே!
என் உருவத்தில் மயங்கி உண்மையை மறந்த பேதையே!
நானும் நீயும் யாரென்று அறிய முயற்சி செய்

என் அழகும் வெளித் தோற்றமும் உன் கற்பனையே
உன் ஐம்புலன்களும் இவ்வுலகமும் என் திருவிளையாட்டே
உன் உடலும் உள்ளமும் வெறும் மாயையே
உன் சொந்தமும் பந்தமும் புறக் கண்களுக்கே
உன் அறிவும் அகந்தையும் நான் கொடுத்த பொய்மையே
என் ஆராதனையும் அவதாரமும் உன் சாதனைக்கே
இதை உணர்ந்து உடனே விழித்துக் கொள்
நானும் நீயும் அன்பைத் தவிர வேறி;ல்லை
ஆன்மாவான உனக்கு உருவம் என்று ஒன்றில்லை
இதை புரிந்துக் கொண்டு பிறகு என்னை அழைப்பாய்
என்று கூறி விட்டு என் கண்ணன் மறைந்தே விட்டான்

நான் எங்கு சென்று அவனைத் தேடுவேன்
அவன் கூறிய உபதேசம் என் காதில் விழவில்லையே
அவனையல்லவோ நான் பார்த்துக் கொண்டிருந்தேன்
பல பெண்களை பித்தனாக்கிய எத்தனல்லவோ அவன்
இருப்பினும் என் மனம் அவனுக்காகவே ஏங்குகிறதே
என்ன கல்நெஞ்சம் அவனுக்கு என்னை தவிக்க விட்டு செல்ல

பொன் வேண்டேன் பொருள் வேண்டேன்
அழகு வேண்டேன் அறிவும் வேண்டேன்
சுற்றம் வேண்டேன் சுகம் வேண்டேன்
பேச்சும் வேண்டேன் மூச்சும் வேண்டேன்
தத்துவம் வேண்டேன் உண்மையும் வேண்டேன்
உயிரும் வேண்டேன் ஒன்றும் வேண்டேன்

ஆயிரத்தில் ஒருத்தியாக நான் இருந்தாலும்
என் மனம் அவனைத் தவிர வேறொன்றும் விரும்பவில்லை
எனக்கு அவனைத் தவிர வேறெதிலும் நாட்டமில்லை
ஒரு முறை என் அன்பிற்கு அடிபணிந்தவன்
வேறு பெண்களின் அழைப்பில் பறந்து சென்றானோ
இல்லை என்னை மறந்து தான் விட்டானோ
அவன் தத்துவமும் புரியவில்லை
அவனையும் புரிந்துக் கொள்ள முடியவில்லையே

என் கண்ணனை கண்டீரோ யாரேனும்
என் மாயக் கண்ணனைத்தான் கண்டீரோ

என் கண்ணனை தான் கண்டீரோ எங்கேனும்
என் இதயக் கண்ணனைத்தான் கண்டீரோ

அன்பு

அன்பு தன்னலமின்றி தருவதற்கே
அன்பு உணர்ந்து குதிப்பதற்கே
அன்பு அனைவருடன் பகிர்வதற்கே
அன்பு என்றும் தூய்மையானதே

அன்பு மகிழ்ச்சியில் துள்ளும்
அன்பு வெட்கத்தில் மலரும்
அன்பு அனுபவிக்க துடிக்கும்
அன்பு அழிவல்ல நினைக்கும்

அன்பு தருவது வலியை
அன்பு திணிப்பது களிப்பை
அன்பு வெல்வது நெஞ்சை
அன்புக்கு தேவையில்லை மூளை

அன்பு அழகில் முதலில் மயங்கும்
அன்பு செய்த மனம் தவிக்கும்
அன்பு இல்லை என்றும் பாவம்
அன்பு வெல்வது அல்ல விரும்பும்

அன்பு உண்மையை கணிக்க தவறும்
அன்பு கோபத்தையும் தூண்டும்
அன்பு வயதை அல்ல காணும்
அன்பே ஞானியை உருவாக்கும்

அன்பு விலைக்கும் வாங்கும் பொருள் இல்லை
அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை
அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை
அன்பு இனி செல்வது சரியான பாதை

அன்பு உயர பறக்க நினைக்கும்
அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும்
அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும்
அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும்

அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை
அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை
அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை
அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை

மெளனம்

அலையென முழங்கும் எண்ணங்களில்
என்னை உணர்ந்த தருணங்களில்
இருளான பாதையில் நுழைகையில்
அறிந்தேன் நான் ஆசையின் பிடியில்

அமர்ந்தேன் முகப்பில் பொறுமையுடன்
கேட்டேன் காலடிச்சத்தம் கவனமுடன்
எழுந்தேன் கொல்வதென்ற முடிவுடன்
இல்லையெனில் வாழவிடுமா அமைதியுடன்

எண்ணமெனும் ரம்பையின் நாட்டியத்தில்
என்னையே இழக்கவிருந்த நேரத்தில்
உண்மையை புரிந்துகொண்ட சிலிர்ப்பில்
வேரோடு பிடித்தேன் அதை தியானத்தில்

ஆசைகள் கால்பிடித்து கெஞ்சினவோ
எண்ணங்கள் கதவைதட்டி நுழைந்தனவோ
பலவித செருக்கையும் அழித்தனவோ
என்சிரிப்பில் கள்ளமனைத்தும் அழிந்தனவோ

எனக்கென வரலாறு ஏதுமில்லை
விதியென பேசுவதில் அர்த்தமில்லை
ஆசான் நானே வேறு யாருமில்லை
மெளனமே என்றென்றும் எந்நிலை

காண்பவை மெளனத்தின் வெளிபாடே
எண்ணங்கள் மெளனத்தின் வெளிபாடே
ஆனால் மெளனம் அனைத்தையும் தாண்டியநிலை
ஏனெனில் மெளனமே ஆத்மனின் நிலை

Saturday, November 18, 2006

நட்சத்திரப் பார்வை

கண்கவரும் மாலைப் பொழுதின் நேரத்திலே
கடற்கரையில் நானும் தலைசாய்த்த வேளையிலே
கண்டேன் கடலரசனின் ஓயாத விளையாட்டிலே
அன்பின் வெளிபாடாய் கணக்கற்ற அலைகளிலே

இரவும் பகலும் அவளான கடற்கரையை
பகிரங்கமாக அவன் காதலிக்கும் கூத்தை
வியந்தேன் இயற்கையின் விந்தையைக் கண்டே
சிரித்தேன் நிதம்தவறாத நாடகத்தைக் கண்டே

மறைந்தன என்னைச் சுற்றிய குரல்களும்
விரைந்தன என்மேல் விழுந்த நிழல்களும்
நிறைந்தன எங்கும் கருமையான இருளும்
நிலைத்தன வான்நோக்கிய என் விழிகளும்

விண்மீன்கள் என்னைக்கண்டு கண் சிமிட்டினவே
அதன் அன்பில் என்நெஞ்சம் கரைந்தனவே
கருவிழிகள் ஒவ்வொன்றாய் காண விழைந்தனவே
வானத்து வரைபடத்தைக் கண்டு மலைத்தனவே

நட்சத்திர அளவை மனம் உணர்த்த
அதன் சூடும் அறிவைத் தாக்க
நெஞ்சம் என் கண்ணை மட்டும் ஏற்க
இவையின்றி எப்படியிருக்கும் என்றே நினைக்க

கவிஞர்களின் கவிதைகள் தடுமாறி தவிக்குமோ
வானியல் வெறும் கட்டுக்கதையாகி இருக்குமோ
வானம் அழகின்றிதான் இருண்டு போகுமோ
சூரியனின்றி இவ்வுலகமும் அழிந்து இருக்குமோ

நட்சத்திரத்தின் உயர் நிலையை உணர்ந்தேன்
ஒவ்வொன்றும் தேவையென்பதை அறிந்தேன்
ஒற்றுமையின் அழகையும் சிறிதே கற்றேன்
கண்ணும் அறிவும் ஒருசேர எழுந்தேன்

நான் கற்றப் பாடத்தைக் கேட்பாய்
என் மனம் கொண்டே அதை உணர்வாய்
நீயொரு நட்சத்திரம் என்றே அறிவாய்
நானும் நட்சத்திரமே என்பதை ஏற்பாய்

Wednesday, November 08, 2006

உன்னையே காண்கிறேன்

தட்தட்டென தரையில் நர்த்தனமாடும் மழைநீரின் ஆட்டத்தில்
வெகுளியாய் துள்ளியோடும் புள்ளிமானின் மிரட்சியில்
கவலையின்றி உயரப் பறக்கும் பறவையின் சுதந்திரத்தில்
அதிகாலை சோம்பலை தட்டி எழுப்பும் சூரிய கிரணங்களில்

ஓய்வின்றி புரியாமல் உழைக்கும் கடலலையின் ஓங்கிய ஓசையில்
சிரிக்கும் பூக்களை முத்தமிட துடிக்கும் தேனீயின் ரீங்காரத்தில்
கண்கவர் வண்ணங்களில் பறக்கும் பட்டாம்பூச்சியின் படபடப்பில்
வெறுமையை அருமையாய் காட்டி கண்கட்டும் நீலவானில்

செருக்கோடு வானத்தில் மிதக்கும் நீருண்ட கருமேகங்களில்
உடல் நடுங்க மனம் கலங்க கம்பீரமாய் முழங்கும் இடியோசையில்
மௌனமாய் தியானம் செய்யும் மலையுச்சியின் இரகசியத்தில்
பெண்மையின் நாணத்துடன் கூடிய நதிநீரின் நளின ஓட்டத்தில்

வெள்ளிக்கம்பிகளாய் தரையில் விழும் அருவியின் அவசரத்தில்
அழகான வெண்ணிலவை பிரதிபலிக்கும் ஏரியின் அமைதியில்
உரிமையோடு உறவாடும் தென்றலின் பட்டுப் போன்ற மென்மையில்
மனதை உருக்கும் அழிவை செவ்வனே செய்யும் புயலின் சீற்றத்தில்

பூமியில் நடந்த எண்ணற்ற பாதைகளின் காலடிச்சுவடுகளில்
உறைந்து படர்ந்து நிற்கும் பனிமலையின் வெண்மையில்
பறவைகளின் கானத்தில் திளைக்கும் கானகத்து மரங்களின் பசுமையில்
கடினவாழ்வின் சின்னமாம் வறண்ட பாலைவனத்தின் மண்விரிப்பில்

காண்போரை மயக்கும் வானவில்லின் வண்ணகுழைவினில்
உயிரை வருடிச் செல்லும் கவிஞனின் வார்த்தை ஜாலங்களில்
காலம் முழுதும் நெஞ்சில் வலியைத் தரும் காதலில்
கள்ளமறியா மனங்கொண்டு உயிரையும் தரும் அன்பில்

அனைத்திலும் அனைத்திலும் உன்னையே காண்கிறேன்
உன் காலடியில் வீழ்ந்த கணங்களிலும் உன்னையே காண்கிறேன்
உன் பாராமுகத்திலும் உன்னையே நினைத்து வாழ்கிறேன்
இறப்பை எதிர்நோக்கிய என் உயிரிலும் உன்னையே காண்கிறேன்

Friday, November 03, 2006

என் குரல் கேட்பாய் கண்ணா


கோகுலத்து நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து
பல மனைகளில் அழையாமல் நுழைந்து
குறும்பு செய்தே களைத்துப் போய்
என் கழுத்தைகட்டி உணவு உண்டு
அந்தி பொழுதின் குளிர்ந்த கவர்ச்சியில்
என் மடியில் படுத்து சிரித்துக்கொண்டே
மெல்லிய குரலில் வருடிச் செல்லும்
என் ஆராரோ இசையில் நீயும் மயங்கியே
விளையாடி களைத்த உடல் இறைஞ்ச
உன் கேசத்தை இதமாய் கோதிவிடும்
என் கையை பிடித்த உன் பிஞ்சுக்கரங்கள்
ஆதரவு கிடைத்த மகிழ்ச்சியில் சிறிது
கண்மூடி உவகையுடன் உலகம் மறந்து
தூங்கும் வேளையில் என் கண்கள்
உன் கருநீல அழகுமுகம் கண்டு
லயித்துப் போன பெருமை நெஞ்சுடன்
கண்திருஷ்டி கழிக்க இறைவனை வேண்டி
உன் குறும்பில் நானும் பொறுமை இழந்து
உன்னைத் திட்டிய கணங்களை நினைத்தே
உன் பாதம் எடுத்து என் கண்ணில் ஒற்றி
அதன் மென்மையில் கரைந்து கண்ணீர்விட
வெண்ணெய் திருடும் கயவனின் தாயே
என்றே அனைவரும் என்னை இகழ்ந்தாலும்
ஒருகணமும் உன்னைவிட்டு பிரிய மனமின்றி
அணைத்து அரவணைத்து அன்புடன் காப்பாற்றவே
துடிப்பவள் இந்த பேதை என்பதை
புரிந்து கொள்வாயோ என் செல்ல மகனே

Saturday, October 28, 2006

ஓர் உறவு

ஒளிர்ந்து மிளிரும் கண்கள்
மறக்க முடியாத தோற்றம்
காணக் கிடைக்காத கம்பீரம்
அழகான வெகுளிப் புன்னகை
உண்மைத் தாங்கிய சொற்கள்
மனங்கவரும் கவர்ச்சியான பேச்சு
நெஞ்சைத் தொடும் கானம்
சூரியனாய் பிரகாசிக்கும் அறிவு
சிரிக்க வைக்கும் நகைச்சுவை
பிறரைத் தடுமாறவைக்கும் நினைவு
குழந்தையாய் மாறிவிடும் வெகுளித்தனம்
கனவுகளை நனவாக்கும் தாகம்
அசைக்க முடியாத உறுதி
ஆசைகளற்ற உயர்ந்த குணம்
திக்குமுக்காட வைக்கும் அன்பு
அவர் யாரோ என்றே வியக்கிறேன்

அந்த முகத்தை காணும் போதெல்லாம்
என் கண்கள் கண்ணீரால் நனைகின்றன
புரியாமல் படித்த அவர் படைப்புகளும்
என் இதயவீணையை மீட்டுகின்றன
காணாமல் கண்டு பேசாமல் பேசி
என் அன்பையும் மதிப்பையும் பெற்ற
அவர் எனக்கு உறவோ என்றே வியக்கிறேன்

சோர்ந்து போகும் கணங்களில்
என்னுள் உற்சாகத்தைத் திணித்து
கேள்வியான வாழ்வின் இரகசியத்தை
ஞானமென்னும் அன்பால் புரிய வைக்கும்
அவர் யாரென்று புரியாமல் வியக்கிறேன்

என்னால் அவரைக் காண முடியாது
என்றே உலகம் பறைசாற்றினாலும்
என்னுள் சிறுதீபமாய் ஓர் ஆசை
அவரை ஒரு முறை காண வேண்டுமென்று
தேடுகிறேன் என் தனிமையில் அமைதியில்
அந்த ஞானச்சுடரைக் கண்டு வணங்க
அந்த உறவின் அன்பையும் ஏற்று மகிழ

அவர் வேறு யாருமல்ல
அனைவரும் வானளாவப் போற்றும்
தன்னிகரற்ற சுவாமி விவேகானந்தரே


இதே கருவைக் கொண்டு மற்றுமொரு முயற்சி....

கண்களில் மிளிரும் ஒளிதான் எத்தனை அழகு
தோற்றத்தில் தெரியும் கம்பீரம்தான் எத்தனை அழகு
புன்னகையால் மயக்கும் காந்தசக்திதான் எத்தனை அழகு
சொற்களில் தெறிக்கும் அறிவுதான் எத்தனை அழகு

உண்மையை வெளிப்படுத்தும் பாங்குதான் எத்தனை அழகு
கானத்தில் இழையும் குரலினிமைதான் எத்தனை அழகு
கவலையின்றி சிரிக்கும் குழந்தைத்தனம்தான் எத்தனை அழகு
எதையும் மறக்காத நினைவாற்றல்தான் எத்தனை அழகு

கனவுகளை நனவாக்கும் தீராத் தாகம்கண்டு வியப்பதுண்டு
உலகமே இடிந்தாலும் உடையாத உறுதிகண்டு மலைப்பதுண்டு
ஆசைகளற்ற சுயநலமற்ற வாழ்வை கண்டு கண்கலங்கியதுண்டு
அனைவருக்கும் வாரி வழங்கிய அன்புகண்டு நெகிழ்ந்ததுண்டு

உன்னைக் காணும் விநாடிகள் என் கண்கள் தவம் செய்தனவோ
உன் படைப்புகளில் அமிழும் நேரங்கள் எனக்காகவே நின்றனவோ
உன் உற்சாகம் தொற்றுநோய் போல் என்னை வந்தடைந்தனவோ
உன் ஞானமும் என் அன்பில் சிறிது கரைந்தனவோ

காண முடியாத உறவாய் என்னைக் காணாமல் மறைந்ததேன்
கண்ணீரைத் துடைக்கும் கரங்கொண்டு என்னைத் தேற்றாததேன்
கள்ளமற்ற அன்பை ஏற்று அகக்கண்களில் காட்சி தராததேன்
ஞானத்தை புகட்டும் ஆசானாய் என்னை ஆட்கொள்ளாததேன்

உன்னைக் காண ஆசைகொண்டு நான் கண்மூடிய வேளையில்
என்னைக் கண்டு அருவமாய் நின்று சிரித்து மகிழ்கிறாயோ
வேண்டுவது வேறொன்றுமில்லை என்றே நான் நிற்கையில்
சுவாமி விவேகானந்தராய் இறைவனே நீயே காட்சி தருவாயோ

Tuesday, October 17, 2006

இறை வணக்கம்

கல்லாகி மண்ணாகி காற்றாகி நீராகி
விதையாகி துளிராகி இலையாகி செடியாகி
கொடியாகி மரமாகி பூவாகி காயாகி
பழமாகி உணவாகி உறவாகி சொல்லாகி
அன்பாகி உயிராகி தாயாகி கன்றாகி
சுகம் துக்கம் தந்தருளும் இறைவனுமாகி
என்னையும் இவ்வுலகில் நடமாட வைக்கும்
உனக்கு நன்றிகலந்த காலை வணக்கம்

ஒவ்வொரு நாளும் கடைசி நாளே
என்றே துவக்கும் நான் வேண்டுவது
பிறர் மனம்நோகா வரம் ஒன்றே
என் இறப்பு யாருக்கும் வியப்பில்லை
இழப்பிற்கு வருந்ததக்க உயிரும் இல்லை
நீ ஊஞ்சலில் ஆடியபடி என்னை அழைக்க
உன் மடியில் குழந்தையாகி தலைவைத்து
அன்பான கோதலுடன் சிரித்துக்கொண்டே
என்னை ஏற்றுக்கொள்ளும் நாளும் இதுவோ
என்றே காத்திருக்கிறேன் தினம் தினம்

Monday, October 02, 2006

கலங்கிய மனதின் கேள்வி

பட்டுப் புடவையும் வைரமும் அணிந்த உடல்
இன்று மார்ச்சுவரியில் தன்னந்தனியே கிடந்த அவலம்
முகம் போர்த்திய வெள்ளைத் துணியை
என் கைகள் விடுவித்து அதனைப் பார்த்த போதுதான்
நன்கு உறைத்தது ‘அவள்’ ‘அது’ வான உண்மையை

அறுபது வயது பெரியக் குழந்தை ஒன்று
சாயத் தோளின்றி பரிதவித்த கோலம்
உருவமற்ற உயிர் எங்கு பறந்து சென்றதோ
என்று புரியாமல் அரற்றிய அந்த வேதனை
என்னை நிலைகுலைய வைத்ததென்னவோ உண்மை

இறைவா இது என்ன விளையாட்டு -

பிறப்பையும் இறப்பையும் கொடுத்த நீ
பாசத்தையும் அன்பையும் ஏன் தந்தாய்
இளமையும் முதுமையும் அளித்த நீ
காதலையும் நேசத்தையும் ஏன் திணித்தாய்

உறவையும் பந்தத்தையும் தந்த நீ
ஆசைகளையும் எதிப்பார்ப்பையும் ஏன் அளித்தாய்
அழகையும் அறிவையும் படைத்த நீ
ஏக்கத்தையும் பொறாமையும் ஏன் தந்தாய்

ஒன்று மட்டும் கேட்க விரும்புகிறேன் -

வெற்றியின் பின் ஓடும் மனிதனே
இறப்பை வெற்றிக் கொள்ள முடியுமோ
பிறர் வாழ்வை விலைக்கு வாங்கும் மனிதனே
உன் வாழ்வுதான் நிலைத்திருக்க முடியுமோ


இதை எழுதியது - அக்டோபர் 1, 2006

Monday, September 25, 2006

சின்ன சின்ன ஆசை

என் மனதில் தேக்கி வைத்துள்ள சின்ன பெரிய ஆசைகள் எத்தனை எத்தனை! இதோ உங்கள் பார்வைக்கு…


வானவில்லை போல வளைந்து நிற்க ஆசை
மழை சாரலிலே தொப்பி போட்டு நடக்க ஆசை
சூரியனுடன் கிழக்கும் மேற்கும் ஓடவே ஆசை
ஊஞ்சலில் ஆடியே மேகத்தை தொட்டு வர ஆசை

ஐன்னலில் ஊடுறுவும் கிரணங்களை கைகளில் அடக்க ஆசை
பறவையைப் போல உயர பறந்து வர ஆசை
பட்டாம்பூச்சியின் பின்னே கவலையின்றி துரத்த ஆசை
தீண்டிய தென்றலை கட்டியணைக்க ஆசை

குழந்தையின் பட்டுப் போன்ற கைகளை முகத்தில் வைக்க ஆசை
மொட்டையடித்துக் கொண்டு முகத்தை ரசிக்க ஆசை
அலை அலையான கூந்தலுடன் மறுநாளே மாறிவிட ஆசை
குழந்தையைப் போல குறும்பு செய்ய ஆசை

மூளையின்றி ஒரு நாள் பைத்தியமாக மாற ஆசை
பாண்டி விளையாடி விளையாடி களைத்து விட ஆசை
ஈரமான தலையை நீர் தெறிக்க சிலுப்பி விட ஆசை
அவை மற்றவர் மேல் பட்டு அவர் முகத்தின் பாவத்தை ரசிக்க ஆசை

இருட்டில் ஒலிக்கும் ஓசைகளை மூலையில் அமர்ந்து கேட்க ஆசை
மனம் நிறைய துக்கத்துடன் வாய்விட்டு சிரிக்க ஆசை
கிறிஸ்துவ சகோதரியின் தூய்மையான உடையணிய ஆசை
அதனை களைந்தவுடன் தேவதையாக மாறி விட ஆசை

ஆபரணம் அலங்காரம் இன்றி அழகற்று நிற்க ஆசை
கண்களில் ஒளியை தாங்கி பலரை உயர்த்தி விட ஆசை
கைகளில் பணமின்றி பலரிடம் பிச்சையெடுக்க ஆசை
மழைத் துளிகளின் வேகத்திலே என் கண்ணீரை கரைக்க ஆசை

கடலலைகளின் தாக்கத்திலே அதனுள் விழுந்து விட ஆசை
எழுந்து விட்டு பின்னே அதனை எண்ணி விட ஆசை
நேரத்தின் ஓட்டத்தை சிறிது நிறுத்தி விட ஆசை
தாயின் மடியில் படுத்துக் கொண்டு கதறியழ ஆசை

மழை நீரின் சகதியிலே தட்டி தட்டி நடக்க ஆசை
கடற்கரையின் மணலில் அமர்ந்து தியானம் செய்ய ஆசை
கிராமத்து பெண்களின் வெகுளிதனத்தில் மனம் தொலைக்க ஆசை
நுனி வாழை இலையிலே தினமும் ரசம் சாதம் உண்ண ஆசை

பார்த்து பார்த்து உபசரித்து பலர் என்னை கவனித்துக் கொள்ள ஆசை
ஓவியனின் தூரிகை கொண்டு இயற்கையை வரைய ஆசை
ஓடும் காட்டாற்றிலே பரிசலில் செல்ல ஆசை
எறும்பு புற்றின் ரகசியத்தை அறிந்து கொள்ள ஆசை

நாய்குட்டியின் மூக்கின் மேலே என் மூக்கை வைத்து கொஞ்ச ஆசை
நிலவொளியின் அழகிலே கடற்கரையில் நடக்க ஆசை
யாருமற்ற தீவிலே தனியே ஒரு நாள் கழிக்க ஆசை
இமயமலையின் உச்சிக்கு சென்று ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை

மனிதர்களின் குணமறிந்து புரிந்து நடக்க ஆசை
அனைத்து கலைகளையும் கரைத்து குடிக்க ஆசை
வறியவர் இல்லாத உலகை காண பலநாள் ஆசை
காதலில் நனைந்து உருகி ராதையாகி விட ஆசை

கண் சிமிட்டும் நேரத்திலே சிறு குழந்தையாகி விட ஆசை
பிரிந்த என் அன்புத் தந்தையை காண மிக்க ஆசை
தெளிந்த ஏரி நீரின்மேல் அமைதி குலையாமல் நடக்க ஆசை
உறைக்கும் பனியின் மேல் உருளத்தான் ஆசை

பிறர் உபாதைகளை என் உடலில் ஏற்றுக் கொள்ள ஆசை
அனைத்து உறவையும் மனதார வாழ்த்தவே ஆசை
பிறர் நலனுக்காக பணத்தையும் மனத்தையும் கொடுக்கவே ஆசை
சிரித்துக் கொண்டே தனிமையிலே சில வருடங்களில் மறையத்தான் ஆசை

ஏன் செல்கிறாய் என்னை விட்டு?

பெண்ணே!
ஏன் செல்கிறாயோ என்னை விட்டு?

நான் நல்லவள் என்று சொன்னாய்
அன்புடையவள் என்று சொன்னாய்
பண்புடையவள் என்று சொன்னாய்
அறிவுடையவள் என்றும் சொன்னாய்
ஆனால் ஏன் செல்கிறாய் என்னை விட்டு?

உன் வருகை என் வாழ்வில் வந்த வசந்தம்
நம் நட்பு ஏற்றத்தாழ்வில் வந்த பந்தம்
இது சுத்த மனதினால் உணர்ந்த காந்தம்
புரிந்தது இவ்வுலகில் ஏதுமில்லை சொந்தம்
இருந்தும் கேட்கிறது மனம் ஏன் செல்கிறாயோ என்னை விட்டு?

பெற்றோரை பேணிக் காக்க செல்கிறாய்
குழந்தைகளின் ஆரோக்கியம் வேண்டி செல்கிறாய்
ஆசானின் ஆசிர்வாதம் பெறவும் முயல்கிறாய்
சுற்றம் உறவினர் நலன் கருதியும் செல்கிறாய்
என்னை விட்டும் ஏனோ செல்கிறாய்

உறவுகளை பற்றி நாம் பேசினோம்
உணர்வுகளின் கேளிக்கைகளையும் அலசினோம்
உணவையும் தினமும் பரிமாறிக் கொண்டோம்
நட்பையும் கூடவே வளர்த்துக் கொண்டோம்
இருந்தும் ஏனோ செல்கிறாய் என்னை விட்டு

மகிழ்ச்சியின் போது கை குலுக்கிக் கொண்டோம்
துக்கத்தின் போது அடுத்தவர் கைகளைப் பற்றிக் கொண்டோம்
விஷயங்களை தெளிவுப் படுத்திக் கொண்டோம்
பிரார்த்தனையில் ஒருமித்தும் அமர்ந்தோம்
இருப்பினும் இவை மறந்து என்னை விட்டு ஏனோ செல்கிறாய்

ஆன்மீகம் அலசிப் பார்த்தோம்
அதன் முறைப்படி நடக்க நினைத்தோம்
ஆன்மாவை நினைவு கூர்ந்தோம்
இருப்பினும் உணர்வுகளில் தடுமாறினோம்
இந்த தடுமாற்றத்தில் ஏனோ என்னை விட்டு செல்கிறாய்

விண்மீன்களின் மினுமினுப்பை கண்டேன்
உன் கண்களில் அதன் மர்மம் கண்டேன் என் தோழி
பரந்த கடலை நினைத்துக் கொண்டேன்
உன் மனதை என் முன் நிறுத்தினாய் என் தோழி
ஆனாலும் ஏனோ செல்கிறாய் என்னை விட்டு?

இந்த தோழியிடம் அன்பைத் தவிர வேறில்லை
உன் பிரிவை நினைத்து வருந்தாத நாளில்லை
நித்தமும் உன் குரல் கேட்பேனா என்றும் தெரியவில்லை
கலங்கிய என் கண்களில் கண்ணீரைத் தவிர வேறில்லை
இருந்தும் நான் இப்பொழுது கூறுகிறேன் ‘போய் வா பெண்ணே’

உன் கடமைகளை முறையே செய்து கொண்டிரு
அன்பை எதிரிக்கும் வழங்கி கொண்டிரு
ஆன்மீகத்தில் உயர பறந்து கொண்டிரு
இவ்வுலக வாழ்வையும் ரசித்துக் கொண்டிரு
திரும்பி வந்து உன் முகத்தை எனக்கு காண்பித்துக் கொண்டிரு

இருபது ஆண்டுகளுக்கு பின்

முதுமையின் பெருமையை தாங்கிதான் நிற்பேனா
வெள்ளை முடிசூடி என் அழகைதான் இரசிப்பேனா

முகங்கள் பல கண்டு துள்ளிக் குதித்து மகிழ்வேனா
முகமே தேவையில்லை என்று மறைந்து தான் வாழ்வேனா

நோய்களின் பாசத்திலே துவண்டு போய் விடுவேனா
உடலின் வலிமையிலே தேனீ போல் வாழ்வேனா

கண்களிலே ஒளியிழந்து இருளைதான் மணப்பேனா
கண்ணல்லவோ நீ என அகம் மகிழ வைப்பேனா

கால்களிலே வலுவிழந்து தடியை தான் பிடிப்பேனா
நிமிர்ந்த நடை போட்டு உலகையே வலம் வருவேனா

சொற்களின் ஜாலங்களில் மயங்கியேதான் இருப்பேனா
வார்த்தைகளின் தாலாட்டில் பலரையும் உடன் அழைப்பேனா

கலைகளை கற்காததால் மனம் நொந்து போவேனா
வாழ்வின் கலையிலே தலை சிறந்து விளங்குவேனா

தாயின் இறுதி மூச்சு வரை சேவையைதான் செய்வேனா
பெற்றவளின் குணத்தை நான் சிறிதளவாவது கற்பேனா

மைந்தனின் வாழ்விலே அவன் நலனையேதான் நாடுவேனா
சுதந்தரமாய் படிக்க வைத்து பறக்க விட்டு மகிழ்வேனா

கணவனின் குறிப்பறிந்து பாசத்திலே திகழ்வேனா
குணமறிந்து மனமறிந்து அன்பு நடை நடப்பேனா

இளமையின் துள்ளலுடன் இயற்கையைதான் பார்ப்பேனா
இளவயது நினைவுகளை நினைவு கூர்ந்து சிரிப்பேனா

தொட்டு விட்டு ஓடி விடும் அலைகளை அணைக்கத்தான் துடிப்பேனா
எட்ட நின்று வானவில்லின் வண்ணத்திலே குழைவேனா

தாலாட்டும் செடிகளோடு தலை சாய்த்து சிரிப்பேனா
மலர்களின் மென்மையை தொட்டுதான் உணர்வேனா

நீலநிற வானத்தின் பொய்மையிலேதான் கரைவேனா
சூரியனின் ஒளிகளிலே தத்துவத்தையே உணர்வேனா

கள்ளமில்லா புன்னகையோடு அனைவரையும் கவர்வேனா
பார்த்து பார்த்து கவனித்தே எல்லோரையும் உபசரிப்பேனா

மகிழ்ச்சியற்ற நினைவுகளிலே வருந்தியேதான் அழுவேனா
வாழ்வின் சிறப்பம்சத்தை நன்றியோடு நினைப்பேனா

நன்றி கொண்டு நண்பர்களை பார்த்து விட்டு வருவேனா
கரம் குவித்து வணங்கி விட்டு என் நன்றியைதான் சொல்வேனா

நெஞ்சைத் தொட்ட மனிதர்களின் பாதங்களைதான தொடுவேனா
சிறிய பெரிய அனாதைகளை அரவணைத்து காப்பேனா

தொண்டு செய்யும் உள்ளங்களை தேடி சென்று பாராட்டுவேனா
தோளோடு தோள் நின்று ஊக்குவித்து காட்டுவேனா

வறுமையிலே திகழ்ந்தாலும் இனிமையிலே மிளிர்வேனா
மாளிகையாக உயர்ந்தாலும் மதி கெடாமல் நடப்பேனா

சுற்றம் கூடி ஒதுக்கி வைத்து தனிமரமாய் நிற்பேனா
ஆழ்கடலின் அமைதியைதான் மனதில் நிறுத்தி தாங்குவேனா

வீழ்ந்து விட்ட விநாடிகளை வேகமாக மறப்பேனா
எழுந்து விட்டு விவேகானந்தரைப் போல் பயமின்றி கர்ஜிப்பேனா

மாந்தர்களின் நலனுக்காக நெக்குருகி பிரார்த்திப்பேனா
உண்மையின் கை கோர்த்து உன்மத்தம் ஆவேனா

பிறந்து விட்ட காரணத்தால் வாழ வேண்டுமே என்று சலிப்பேனா
அன்பின் எல்லையிலே இமயமலைதான் கடப்பேனா

சுட்டு விட்ட வார்த்தைகளின் சூட்டிலேயே கருகுவேனா
தாங்கிக் கொண்டு நிமர்ந்து நின்று கருணையையே பொழிவேனா

வரமே வேண்டாத வரம் கேட்டு உன்னதமாய் உயர்வேனா
பிறருக்காக எப்பொழுதும் செருப்பாகவே உழைப்பேனா

துள்ளி ஓடும் என் கண்ணனை ஓடியேதான் பிடிப்பேனா
ராதையை போல் ஊஞ்சலாடி அவன் இசையிலேதான் கரைவேனா

படபடக்கும் சிட்டுக்குருவியின் இறக்கையைதான் பெறுவேனா
உயிர் பிரிந்து சென்ற பின்னே உயர உயர பறப்பேனா

காலத்தின் வேகத்திலே ஓடி ஓடி களைப்பேனா
மனம் உவந்து சிரித்து மகிழ்ந்து அன்றாடம் வாழ்வேனா

இன்னும் எத்தனை எத்தனை என்று எண்ண முடியாமல் திணறுகிறேனா
இவை எதுவும் காணாமல் இன்னும் சில நொடிகளிலே மறைவேனா

விழியே…

காதல், காட்டம்
கனிவு, கசப்பு
களிப்பு, கண்ணீர்
கனவு, கவலை
எப்படி உன்னால் மட்டும்
உணர்வுகளின் தாக்கங்களை
பிரதிபலிக்க முடிகிறது?

வானத்தில் மின்னும் தாரகைகளும்
வளைந்து நிற்கும் வானவில்லும்
வரைந்து மறையும் மேகமும்
நீ இல்லையெனில்
இருந்துதான் என்ன பயன்?

இரவின் இருளில்
நினைவுகளின் அழுத்தத்தில்
தனிமையின் தவிப்பில்
உடலும் அமைதியான வேளையில்
மூடிய உன் நிலையிலும்
கண்ணீரை விட்டு
எப்படி இயங்க முடிகிறது?

இதயம் சுக்குநூறாக
உடைந்து நொறுங்கும் போது
நீ கண்ணீர் ரத்தத்தை விடுகிறாயே
உனக்கும் இதயத்துக்கும்
அப்படி என்னதான் சம்பந்தம்?

இடது வலது என்று
கைகள் தனித்தனியே
இயங்கும் போது
நீ மட்டும் வெட்கமின்றி
எப்பொழுதும்
உன் ஜோடியுடன்
ஏன் இப்படி அலைகிறாய்?

ஜன்னல்களாக இருந்து
பலரின் இதயங்களை இணைக்கும் நீ
அழகை ஆராதிக்கும் நீ
உன்னையே உன்னால்
ரசிக்க முடிவதில்லையே
ஏன் மறந்தாய் இந்த உண்மையை?

இமைகள் தூங்கிவிட்டதனால்
சிறு துரும்பு உன்னை தாக்க
கண்ணீரோடு அலைகிறாயே
சோகத்தின் உச்சத்தில்
அதிர்ச்சியின் அதிரடியில்
சில நேரங்களில்
ஏன் கண்ணீரற்று உறைகிறாய்?

அழகு உன்னால் அழகு பெற
அறிவு உன்னால் வளர்ச்சி அடைய
சுயநலமிக்க இவ்வுலகில்
நீ மட்டும் ஏனோ
பலனின்றி உழைக்கிறாயே
இது தெரியுமா உனக்கு?

நீயும் நானும்

நீ சிரித்து
நான் சிரித்து
முகிலினங்கள்
நம்மைப் பார்த்து
தென்றலின் சீண்டலையும்
இனிதே உணர்ந்து
உலகம் மறந்து
கள்ளமற்று
வளர்ந்த
நம் அன்பு
சிலுவையில்
அடைக்கலம் அடைந்ததே
என் கல்லறை
காண நீ வருவாயோ

பி.கு. இது ஒரு மொட்டைத் தலையின் விசும்பல் :D

நான்

கண்ணிருந்தும் காணவில்லை
வாயிருந்தும் பேசவில்லை
செவியிருந்தும் கேட்கவில்லை
அழகிருந்தும் ஆணவமில்லை
அறிவிருந்தும் அகந்தையில்லை
மொழியிருந்தும் மோகமில்லை
கண்ணீரிலும் கவலையில்லை
சிரிப்பிலே கள்ளமில்லை
உறுதியிலே உறவில்லை
பாசத்திலே நோக்கமில்லை
முகத்திலே பொய்யில்லை
சுகத்திலே பெருமையில்லை
துக்கத்திலும் வருத்தமில்லை
சுற்றமிருந்தும் எதிர்ப்பார்ப்பில்லை
கேட்டவை தட்டவில்லை
கலையிலே காட்டமில்லை
வேள்வியிலே வேதனையில்லை
நெஞ்சிருந்தும் கலக்கமில்லை
மனமிருந்தும் மயக்கமில்லை
காதலிலே காமமில்லை
அன்பிருந்தும் ஏக்கமில்லை
உணர்விருந்தும் வேகமில்லை
மென்மையிலே நடுக்கமில்லை
அணைப்பிலே சுயநலமில்லை
வாழ்விருந்தும் பற்றில்லை

Sunday, September 24, 2006

சின்னச் சின்னக் கண்ணனுக்கு…

கருநீலமேனியிலே பட்டுடுத்தி
கால்களிலே சலங்கைக் கட்டி
பவள வாயில் சிரிப்பைத் தேக்கி
சின்னச் சின்னப் பாதம் வைத்து
என் கழுத்தைக் கட்ட ஓடி வரும்
உன் அழகை காண விரும்புகிறேன்
என்னைத் தேடி வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ

குழலின் இனிமையிலே
சிரிப்பின் ஜாலத்திலே
அந்திப் பொழுதினிலே
இயற்கையின் விந்தையிலே
நினைவுகளின் அசைவினிலே
இந்த ஏழையின் நெஞ்சினிலே ஆட
என் கண் மூடி செவிகளில் சிரிப்பாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ

என் சீடையும் வெண்ணையும்
உன்னை வாவென்று அழைக்க
குழலூதும் கண்ணனை வேண்டாம் என்றே
ஒதுக்கி வைத்த மனைகளில் எல்லாம்
தேடி ஓடி சேவை செய்யும் உன்னை
நினைத்து நினைத்து வியக்கிறேன்
உனக்காக உண்ணாமல் காத்திருக்கும்
என் கன்னத்தில் முத்தமிட வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ

பெற்றத் தாயை அழ வைத்து
வேற்றுத் தாயை பித்தாக்கிய
உன் கல் நெஞ்சம் கண்டும்
வியக்கிறேன் மலைக்கிறேன் துடிக்கிறேன்
துன்பத்திலும் சிரிக்கும் உன்னை ஆராதிக்கிறேன்
என் அன்பின் ஆழத்தைக் காண
என் நெஞ்சில் நிலைக்க வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ

சிட்டுக்குருவியே…


அழகான உன்னை வருடவே நினைத்தேன்
படபடக்கும் சிறகுகளைக் கண்டே மயங்கினேன்
அந்த சின்ன அலகின் அழகினிலே கரைந்தேன்
உன் கூட்டையும் சிறிது காணவே விழைந்தேன்

உன்னை அன்புடன் அணைக்கவே வேண்டினேன்
நிலை கொள்ளாமல் தவிக்கும் உன் குணத்தால் வியந்தேன்
உன் குரலின் இனிமையிலே நானும் நனைந்தேன்
நீ சிரிப்பாயோ என்று அறியவே நெருங்கினேன்

பறப்பது உன் உரிமை என்று பெருமிதமடைந்தாயா
விண்ணில் வரைந்த மேகக்கூட்டங்களைதான் பார்த்தாயா
அதை உன்னால் தொட முடியவில்லையே என்று ஏங்கினாயா
இருப்பினும் வாழ்வின் ராகங்களை அமைதியாய் ஏற்றாயா

பல கவிஞர்களை மயக்கும் உன் பெருமையை அறிவாயோ
அகிலமும் உன் கையிலே என்பதை உணர்வாயோ
அன்றாட அலுவல்களை உணர்ந்தேதான் செய்வாயோ
என் அருகாமையையும் ஏற்று சிறிது மகிழ்வாயோ

வாழ்வது எதனாலே

கண்களாலே கருணைப் பொழிந்து
வாக்கினிலே இனிமை கலந்து
கைகளாலே அரவணைத்து
கால்களாலே உலகம் சுற்றி
மூச்சினிலே உயிரை வைத்து
இசையினிலே மெய்மறந்து
கவிதையாக வாழ்ந்து காட்டி
அழகினைத்தான் வெளிக் கொணர்ந்து
உணர்வுகளாலே உயர்ந்து நின்று
நல்லாசானின் அறிவுரை ஏற்று
அடக்கத்திலே சிறந்து விளங்கி
கடமையிலே தலைசிறந்து
பிறருக்காக மனம் கசிந்து
மனதினிலே உண்மை நிலைத்து
அன்பினாலே சுடர் ஏற்றி
தியானத்தின் முறை அறிந்தே
ஞானத்தின் வழி அடைந்து
மௌனத்தை உணர செய்து
ஆரவாரமற்ற ஒரு மூலையிலே
பிறருக்கும் பகிர்ந்தளித்தே
வாழ விரும்புகிறேன் நான்