அரங்கமே மின்னொளியால் குளிக்க
ரசிகர்களும் பண்பாய் அமர
அந்நாளின் காவியத்தைக் காண
மேடையும் தயாராய் நின்றதுவே
பரப்பரப்பின் உச்சத்தில் நின்றபடி
அக்காவியத்தின் நாயகரை கண்டுவிட
அரங்கமும் எதிர்பார்ப்பில் அதிர்ந்தபடி
வரவேற்பை தந்து மகிழ்ந்ததுவே
மூச்சையடக்கி காத்திருந்த மக்களின்
அசைவற்ற அவ்விடத்தின் அமைதியோ
உலகின் உன்னத இசைக்குழுவின்
ஸ்வரங்களைவிட சிறந்து இசைத்தனவே
கூட்டத்தின் நெருக்கடியில் நானும்
மெல்ல மெல்ல நடந்துவந்து
அக்கம்பக்கம் முறைப்பை தவிர்க்க
ஓரமாய் ஒதுங்கி அமர்ந்தேனே
ஒளியணைத்த அரங்கில் இனி
நாடகத்தை கண்டுவிடும் துடிப்பில்
மக்களும் ஆரவாரமாய் கைதட்ட
திரையும் சிறிதுசிறிதாய் விலகியதே
மான் விழி மிரட்சியுடன்
மலரினும் மென்மையாய் திகழ்ந்த
அழகான பெண்ணொருத்தி வந்து
மேடையில் மலர்ந்து நின்றனளே
கேவலின் இடையிலும் சிரித்தபடி
வேதனையிலும் நடனமாடி களித்தபடி
குயிலாய் ரசித்து பாடியபடி
சுயசரிதையை படம்பிடித்து காட்டினாளே
அவள் உள்ளத்தின் அழகினிலே
அரங்கமே அதிசயித்து மயங்க
நடிப்பை நிறுத்தி சிறிதே
அங்குமிங்கும் நடந்து சென்றனளே
தோற்ற வாழ்வினைக் கண்டு
மனமிரங்கி இதயம் கசிந்து
கண்ணீரால் வரைந்த முகங்களை
நானும் கண்டு கொண்டேனே
சலிப்பின்றி அலுப்பின்றி நடந்து
தள்ளாடி தடுமாறி உடைந்து
இறுதியில் விழுந்தவளைக் கண்டு
என் கண்களும் கலங்கினவே
விறகுகள் முட்டுக் கொடுக்க
அவளுடலும் அதில் அமைதியுற
அக்னியின் ஆசைக்கு அளவின்றி
வளர்ந்து உயர்ந்து அணைத்தனவே
கல்நெஞ்சும் உருகும் இந்நிகழ்ச்சியை
தோல்வியில் முடிந்த இவ்வாழ்வை
கைத்தட்டி மரியாதை தந்தாலும்
நல்ல நாடகம் என்றே கதைத்தனரே
நுண்ணிய உணர்வுகளையும் கூட
அபாரமாய் வெளிப்படுத்தி நடித்த
அப்பெண்ணை உயர்த்தி பேசியே
ஒருவர் உரக்க உருகினாரே
முடிவில் திரையும் விழுந்துவிட
வாசலை நோக்கி ஓடிய
ரசிகர்களும் தத்தம் உலகை
காணவே விரைந்து ஓடினரே
நடிகர்கள் அனைவரும் சென்றுவிட
விளக்குகள் அனைத்தும் அணைந்துவிட
கதவும் மூடப்பட்ட நிலையில்
இருட்டிலே தனிமையில் விடப்பட்டேனே
காலமெனும் உறைந்த கட்டங்களில்
சோகமெனும் நெஞ்சின் ரணங்களில்
துளிகளாய் இருசொட்டு கண்ணீரால்
என் முகமும் அலங்கரித்தனவே
உணர்ந்தேன் நானே நாயகியென
சிலிர்த்தேன் அரங்கேறியது என்வாழ்வென
நடித்தேன் நேர்த்தியாய் அழகுடனென
என் தட்டலில் அரங்கமே அதிர்ந்ததுவே
புன்னகை முகத்தில் தவழ
உடலற்று எழுந்து நின்று
உயிராய் சுவற்றைக் கிழித்து வெளியே
வீசுதென்றலில் விடுதலை உணர்ந்தேனே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment