Friday, April 06, 2007

உன் புல்லாங்குழல் எங்கே? - 2

ரத்தம் சதை உணவு மலம் அனைத்தையும்
தாங்கும் எலும்புகளை போர்த்திய தோல்
கண்ணாடியில் தெரியும் பொழுதெல்லாம்
பிரதிபலிக்கும் உருவம் என்னிடம் கேட்கிறது
உன் கண்ணன் காதலித்தது இதற்குதானா?

கூந்தலின் கருப்பு வெள்ளையையும்
அழுக்கைப் பற்றும் நகங்களையும் மறந்து
இளமையின் துள்ளலில் நீ என் கரம் பற்ற
உறைந்த அக்கணங்களே என்னிடம் கேட்கிறது
உன் கண்ணனின் காதல் இத்தனைதானா?

ருக்மிணியையும் சத்யபாமாவையும் சேர்த்து
பதினாறாயிரத்து எட்டு மனைவியரை
மணந்துகொண்டு சுகம் அனுபவிக்கும் உன்னைக் கண்ட
காற்று என்னிடம் ஏளனமாய் கேட்கிறது
உனக்கு பொறாமை ஏதேனும் உண்டா?

மனம் நிறைய ஆசைகளுடன் பாசம் சேர
பலவித எதிர்பார்ப்புகளுடன் அன்பு நடைபயில
இதயத்தை மோகமும் போகமும் கவ்வ
மனிதக்காதல் கண்சிமிட்டி என்னிடம் கேட்கிறது
உன் காதலுக்கு விலாசம் ஏதேனும் உண்டா?

பதில் சொல்கிறேன், கூர்ந்து கேளுங்கள்
கண்ணாடியே, என் தோல் சுருங்கிவிடும்
காலமே, என் இளமை மறைந்துவிடும்
காற்றே, எனக்கு பொறாமை அவசியமில்லை
மனிதக்காதலே, விலாசம் எனக்கு தேவையில்லை

ஏனெனில்
ஐம்புலன்களையும் காப்பாற்றி, மனதில் அழுக்கை அகற்றி
புத்தியில் அகந்தையை நீக்கி, இதயத்தில் வீணையை மீட்டும்
எனக்கே எனக்காக தந்துவிட்ட உன் சப்தஸ்வர புல்லாங்குழல்
நீயின்றியே என் ஆன்மாவுடன் காதல் கானம் வாசிக்கிறதே

‘குழலுடையாள் என் ராதையே’ என்றே
உரக்க உரைப்பாய் உலகிற்கு

No comments: