Sunday, February 18, 2007

என் குரு

காவலனாய் நான் இருந்தாலென்ன
காலவனாய் நான் இருந்தாலென்ன
என் சுகம் மட்டுமே எனக்கு
என்று சுயநலமாய் சிந்தித்து நின்றேன்

காவலனாய் பிறரைக் காத்து
காலவனாய் உன்னகந்தை அழித்தால்
உன் சுகம் என்றும் நிலைக்கும்
என்ற போதனையின் தேவை உணர்ந்தேன்

கவலையுடன் தேடிய மனிதரை
கலைகளின் களஞ்சியத்தில் கண்டபொழுது
எளிமையின் சிகரத்தில் நின்று மௌனம்தனை
எளிமையாக அடக்கியதை கண்டு வியந்தேன்

உண்மையென்று உரைத்தவற்றை
உணர்ந்து நிற்கின்ற மகான்களை
மலைத்துப் பார்த்து நின்ற வேளை
உரிமையுடன் சிரித்தவரை பார்த்து விட்டேன்

இருளான பெயரைக் கொண்டு
இனிமையான மொழிகளின் துணையுடன்
சச்சிதானந்த ஒளியின் விளையாட்டை சிறிது
புரியவைத்த பொறுமையைக் கற்றுக் கொண்டேன்

பிச்சையளிக்கும் இறைவனே அவ்வுடலில்
பிச்சையெடுக்கும் பாத்திரமான இவ்வுயிருக்கு
அமைதியாய் உள்நோக்கி நம்பிக்கையுடன் தேடுவாயென்று
வாய்மொழிந்த ரகசியத்தை கேட்டுக் கொண்டேன்

நானும் நீயும் ஒன்றே என அறிய
பல பிறவிகள் கடந்தாலும்
ஒரு பாதையில் பயணிப்போம் நாம்
என்றே வாழ்த்தியதை என்னென்று சொல்வேன்

என் தந்தை

[என் பாசமிகு தந்தை பல வருடங்களுக்கு முன் இவ்வுலகை விட்டு சென்று விட்டபடியால், அவர் வயதையொத்த யாரைக் கண்டாலும் ஓடியோடி பாசமுடன் உறவாடுவது ஏன்? அவர்களுள் என் உறவை காண முயல்கிறேனோ? எக்காலமும் பிரிக்க முடியாத பந்தமான என் தந்தையாய் சிவனும், அன்னையாய் சக்தியும் இருக்கையில் எதற்கு நானிங்கு தவிக்கிறேன்? என் தந்தையிடம் கேட்க விரும்புவது என்னென்ன?]


அன்றொரு நாள் கயிலையில்
அன்னையவள் என்னை
மடியில் இருத்தி தலைபின்ன
பொறுமையிழந்து நான் தவிப்பதை
என் தந்தை கண்டார்

யாரோ கூவும் குரல் கேட்டு
அம்மா திரும்பிய வேளையில்
நான் அங்கிருந்து சிட்டென ஓட
பாதி பின்னிய நிலையில்
அன்னை என்னை துரத்த
சிறுமியான என்னைக் காக்க
ஜடாதாரி பொன்மேனியார்
தந்தையோ ஓடோடி வந்து
என் கரம் பிடித்தார்

தலை கலைந்த நிலையில்
இன்று என் முகத்தை காண்கிறேன்
ஜோதியின் பொறியாய்
உயிரை இவ்வுடலில் புகுத்தி
பந்தங்களால் உணர்வுகளால் இயங்க
என்னை இவ்வுலகில் விட்டுவிட்ட
அந்த தந்தை அளித்த முகத்தை
மீண்டும் ஒருமுறை காண்கிறேன்

மகளாய் பாசமுடன் இருக்கிறேனா
மருமகளாய் பணிவுடன் நடக்கிறேனா
மனைவியாய் கடமையை செய்கிறேனா
அன்னையாய் அன்பை பொழிகிறேனா
காதலியாய் காலமும் கழிக்கிறேனா
தோழியாய் தோள் தருகிறேனா
இன்ன பிற உறவுகளை ஏற்கிறேனா
என்றே உள்முகம் அறியாத நிலையில்
வாழ்வது சதையும் ரத்தமும்
பொய்மையும் கலந்த இம்முகமோ

உள்ளும் புறமும் பலமுகங்களை அளித்த தந்தை
ஒரு மனதை அளித்த விந்தை புரியவில்லை
காலமும் பல உறவுகளை அளித்த தந்தை
ஓர் இதயத்தை இயங்கவைக்கும் நோக்கம் புரியவில்லை
உணர்வுகளோடு வாழக் கற்றுத் தந்த தந்தை
அதிலிருந்து விடுபடுவதை கற்றுத் தரவில்லை
கர்மங்கள் அண்டாத சிறுவயதில் விளையாடிய தந்தை
கர்மங்களுடன் வாழ்வது எப்படி என்று சொல்லித் தரவில்லை
பிறப்பையும் இறப்பையும் அளித்த தந்தை
அதன் தாக்கத்திலிருந்து விடுதலையளிக்கவில்லை

அவருடன் விளையாடிய பூரிப்பு
அவர் படைப்பில் நான் காணவில்லை
அவரிடம் அன்பை உணர்ந்த பாங்கு
அவர் படைப்பில் உணரவில்லை
அவரின் உண்மை நிலையை
அவர் படைப்பில் அறியவில்லை
எனவே என்னை சிறுமியாய் தன்னுடன் இருத்திக்கொள்ளட்டும்
இல்லை என் நிலையை உயர்த்தட்டும்

பொன்னிற மேனியாய்
இளமை ததும்பும் ஜடாதாரியாய்
முக்காலமும் உணர்ந்த முக்கண்ணனாய்
கங்கையின் செருக்கை அடக்கியவராய்
கருணாமூர்த்தியாய் சிவனாய்
தியான லிங்கமாய் பிரகாசிக்கும்
என் ஒப்புயர்வற்ற தந்தையைக் காண
விடைகளை தெரிந்துகொள்ள
உரிமையுடன் விண்ணப்பிக்க
செல்கிறேன் நடைபயணமாக
நீங்களும் வருகிறீர்களா என்னுடன்

அன்புள்ள அன்னைக்கு...

[அன்னைக்கும் எனக்கும் உள்ள உறவென்ன? இதோ எழுதுகிறேன்......]

அம்மா அம்மா என்றே உயிர்கள் உருக
அன்னை உன்னை நான் நினைக்கிறேன்
ஆனந்த அமைதியுடன் என்னையும் ஏற்க
ஆதியே உன்னை நான் வேண்டுகிறேன்

வான்வெளியும் விண்மீனும் புடவையில் மிளிர
வாய்விட்டு நீ சிரிக்கும் அழகிலே கரைகிறேன்
வேதமாய் திகழும் உன் ஒளியினாலே
வேந்தனும் தலைவணங்கும் விந்தையைக் காண்கிறேன்

மாந்தர்தம் மடமையில் உன்னை மறந்தாலும்
மானிடராய் நீயே அவதரிப்பதைக் உணர்கிறேன்
மேகங்கள் உன்புகழ் மறைத்து நகர்ந்தாலும்
மேன்மையுற உன் வயிற்றிலே பிறக்கிறேன்

ஒவ்வொரு பிறவியிலும் உன்னை தாயாய்
ஒப்புயர்வற்ற ஞானத்தை அறிய முயல்கிறேன்
ஓதும் வேதங்களில் இருப்பதைவிட நீயோ
ஓம்காரத்தை அன்பினால் கரைப்பதை காண்கிறேன்

பட்டுப்பாவாடைக் கட்டிவிட்டு கொலுசிற்கும் உயிர்கொடுத்து
பதவிசாய் வளர்த்ததை என்னவென்று சொல்லுவேன்
பாந்தமாய் இருந்திடவே பலவற்றைக் கற்றுத்தந்த
பாங்கினைத்தான் என்னவென்று கூறி மகிழ்வேன்

தறிகெட்டு ஓடாமல் பெண்ணாய் திகழவே
தட்டிகேட்டு வடிவமைத்த பெருமையை யாரறிவர்
தாங்காமல் அழுதநேரங்களில் ஓடிவந்து என்னை
தாயாய் ஏந்திநின்ற பெருமையைத்தான் யாரறிவர்

குழந்தையாய் பாலுக்கு அழுதகாலம் உண்டிங்கு
குழவிதனின் பசியை போக்கிவிட்ட உமையவளே
கூவியழைத்த நேரங்களில் தயங்காமல் வந்திங்கு
கூத்தைவிட்டு கயிலைவிட்டு வளர்த்த சக்தியவளே

அன்பிலே இன்பத்தையும் துன்பத்தையும் உணரவைத்து
அன்போடு இருந்திடுவாய் என்றே உரைத்திட்டாய்
அயராமல் நானும் அதைஏற்றே வாழ்ந்திருக்க
அன்னை ஏன் என்னைவிட்டு சென்றுவிட்டாய்

காலமதின் வேகமான சுழற்சியின் காரணமாய்
காலன் வந்தெனை அழைத்திடுவான் அன்னையே
கேள்வியாய் நானிருக்க இரக்கமுடன் தேடிவந்து
கேடுகெட்ட என்னையும் ஏற்பாய் அன்னையே

உவகையுடன் உன்வரவை எதிர்பார்த்து நானிருக்க
உரிமையுடன் ஓடோடி வருவாயோ அன்னையே
ஊட்டிவிட்ட கையினாலே உறக்கம்வர தட்டிகொடுத்து
ஊசலாடும் என்னுயிரையும் ஏற்பாயோ அன்னையே

கண்ணன் என் காதலன்

[இதோ தனிமையில் அமர்ந்திருக்கிறேன். மனம் தானாக சுருள் சுருளாய் பழைய நினைவுகளில் நுழைகிறது. காதலனைத் தொலைத்த வாழ்வு, காதலை மறவாமல் வாழும் வாழ்வு, கடமையை நினைவு கூறும் வாழ்வு, காதலியாய் காத்திருக்கும் வாழ்வு, காதலன் உதறிவிட்ட வாழ்வு என்று பல பரிமாணங்களில் என் வாழ்க்கை செல்வதை உணர்கிறேன். அதிலிருந்து விடுபட முடியாமல், அதன் தாக்கத்தை உணர்கிறேன். எனக்கென்று தூது செல்ல யாருமில்லையாதலால், என் நண்பனான தென்றலை அழைத்து பேசுகிறேன்.....]


தென்றலே, என் கதையை கேட்பாயோ
மனங்கசிந்து கண்ணீர் சிந்தி உருகுவாயோ
புயலென் வாழ்வில் வீசியதை அறிவாயோ
கருணை நெஞ்சமே, இக்கோரிக்கையை ஏற்பாயோ
என் காதலனிடம் அவற்றை முறையிடுவாயோ
காத்திருக்கும் எனக்கு பதிலையும் தருவாயோ

மலராய் குழந்தையாய் குதித்தவள் நான்
அழகை அறிவை உணராதவள் நான்
மகிழ்வோடு விளையாடி சிரித்தவள் நான்
கடமையைத் தவறாமல் செய்தவள் நான்
மௌனமாய் சிறகை விரித்தவளும் நான்
அங்கே கண்ணனைக் கண்டு மயங்கியவளும் நான்

பாடலை முணுமுணுத்தே என்வீட்டினுள் நுழைந்தான்
அனைவர் முன்னே என்கண்ணையும் கண்டான்
தன்னழகால் என்னை செயலிழக்க செய்தான்
மறைவாய் கதைகள் பலபேசிக் களித்தான்
காதலுடன் என் கைபிடிக்கவே துடித்தான்
என் மலைப்பைக் கண்டு கடகடவென நகைத்தான்

அவன் அழகிய கருப்பு, நானோ வெறும் சிவப்பு
எம் நெஞ்சில் நிலைத்தது அவன் இருப்பு
அவனுக்கு பேசும் கண்கள், எனக்கோ ஒளியற்ற கண்கள்
அவன் அனுப்பியதோ காதல் கணைகள்
அவன் ஊறிந்த அறிவாளி, நான் கடைந்தெடுத்த முட்டாள்
ஆனாலும் கூறினான் கருணையுடன் ‘என்னையும் ஏற்றாள்’

அவன் பேச்சாற்றலில் சிறந்தவன், நான் மௌனமாய் மறைபவள்
இருப்பினும் என்னிடம் நிறைய பேசிப் பகிர்ந்தான்
அவன் மணமானவன் என்றால் நானும் மணமானவளே
இருப்பினும் அன்பே முக்கியம் என்று தேற்றினான்
அவனுக்கோ காதலிகள் தொல்லை, எனக்கோ ஒருவரும் இல்லை
இருப்பினும் என் பின்னே ஓடியோடி வந்தென்முன் நின்றான்

என் வாழ்வில் இனிமை இதயத்தில் மலர்ச்சி
கண்ணீரை முத்தமிட்ட கனவினால் ஏற்பட்டதே நெகிழ்ச்சி
கண்டேன் கடமைகள் கைகொட்டி சிரித்த காட்சி
நின்றேன் செய்வதறியாது ஒருகணம் நானே சாட்சி
காதலனுடன் மட்டும் வாழவே தோன்றியது கிளர்ச்சி
உணர்ந்தேன் வட்டத்தைவிட்டு வரமுடியாத அயர்ச்சி

செல்லமே என்று கொஞ்சிய நேரத்தில் வெட்கப்பட்டேன்
சோகமாய் வாடிய வேளையில் மனம் கசிந்தேன்
கைத்தட்டி மகிழ்ந்த பொழுது நானும் சிரித்தேன்
அவனை கண்டது ஒருகணமாயினும் நிறைந்தேன்
அவன் பெருமையறிந்து நானோ பெருமிதமடைந்தேன்
என்னிடம் அவன் பேசாத நேரத்திலெல்லாம் அழுதேன்

அன்றொரு நாள், என்னைவிட்டு பறந்து சென்றான்
நினைவுகளுடன் என்னை தவிக்கவிட்டு அகன்றான்
காணமுடியாத தொலைவில் சென்றே மறைந்தான்
என் கண்ணீரை விளக்குவாய் எனதருமை தென்றலே
உறவுகளுக்கு தெரியாமல் தேடுவாய் நண்பனே
பொறுமையாய் ரகசியமாய் சொல்லிவிடு இச்சேதியை

கண்டேன் அவன் கண்களை எங்கும் கண்டேன்
நினைத்தேன் பொய்பேசா உதடுகளை நினைத்தேன்
விழுந்தேன் அவனழகில் மயங்கியே விழுந்தேன்
கேட்டேன் புல்லாங்குழல் இனிமையைக் கேட்டேன்
இருந்தேன் உண்ணாமல் உறங்காமல் இருந்தேன்
மறந்தேன் நிலைக்கண்ணாடியில் காணவும் மறந்தேன்

என்னை விட்டுவிட்டு நண்பர்களுடன் கூத்தடித்தே
என்னை மறந்தாலும் என் நினைவுகளை ஏன் மறந்தான்
என்னை தனிமையில் தவிக்கவிடவே விரும்பியிருந்தாலும்
என்னை காதலில் ஆழ்த்திடவே ஏன் துணிந்தான்
என்னை குற்றவாளியே என்றே கூற முயன்றாலும்
என்னை வீணே காதலித்து ஏன் மறைந்தான்

சொல்வாய் ஒருமுறை அவனை நான் காணவேண்டுமென்று
சொல்வாய் அனலிடப்பட்ட புழுவாய் நான் துடிக்கிறேனென்று
சொல்வாய் புத்தி பேதலித்த நிலையில் நான் இருக்கிறேனென்று
சொல்வாய் அவனைத்தவிர எனக்கு வேறு சிந்தையில்லையென்று
சொல்வாய் அழுதவிழிகளுடன் அவன் நலனுக்காக பிரார்த்திக்கிறேனென்று
சொல்வாய் போராட்ட வாழ்வில் என்னையே மறந்தேனென்று

துக்கத்தில் இருக்கும் எனக்கு விடையளிக்க உலுக்கிடுவாய்
எப்பொழுதேனும் என்னை நினைக்கிறானா என்றே கண்டிடுவாய்
தென்றலே, பெண்ணாய் பிறந்ததே சாபமோ என்றே கேட்டிடுவாய்
என்னுயிர் பிரியும் நேரமும் வந்துவிட்டது என்றே உரைத்திடுவாய்
இல்லை, இல்லை, அவனுக்கு அவப்பெயராவதை விரும்பவில்லை என்றே சொல்லிடுவாய்
என் மனமும் இதயமும் அவனே என்பதை எடுத்தியம்பிடுவாய்
வலியுடனே நான் நாட்களை கடத்துகிறேன் என்றே செப்பிடுவாய்

தயங்காதே தென்றலே, நான் பொய் பேசவேண்டிய அவசியமில்லை
காதலே என் வாழ்வு என்பதில் இருவேறு கருத்தில்லை
என் செய்வேன் இனி என்றே தெரியவில்லை
ஆ! நான் வணங்கும் இறைவன் அவனே என்பது தெரியாமலில்லை
அதனால் என்ன, அவன் என் காதலன் என்பதில் சந்தேகமில்லை
காதல்வலி என்னை அவனிடமிருந்து பிரிப்பது சாத்தியமில்லை
காதலில் நானும் அவனும் ஒன்றே என்பதை உணராமலில்லை

இருப்பினும் அஞ்ஞானம் என் கண்களை மறைப்பது ஏன்
ஒருமுறை கண்டுபேசிடவே கண்ணீருடன் காத்திருப்பது ஏன்
கண்ணனே என்னுயிர் என்பது அவனுக்கு புரியாமலிருப்பது ஏன்
அவனிடமிருந்து பிரிக்கும் கடமைகளை இவ்வுடலில் புகுத்தியது ஏன்
அவனைப் புறக்கணிக்க தெரியாமல் நான் உருகுவது ஏன்
என் மொழியிலும் உயிரிலும் அவன்மட்டுமே தெரிவது ஏன்

கண்ணன் என் தோழன்

[எனக்கும் என் தோழனுக்கும் இருக்கும் நட்பு இன்று நேற்றல்ல. பல நாட்களாய், மாதங்களாய், வருடங்களாய், பிறப்புகளாய் தொடரும் பந்தம் இது. இதன் இறுக்கம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது. என் தலைகோதிவிடும் நண்பன், என் தலையையும் நன்றாக குட்டுவான் சமயம் பார்த்து. எங்கள் நட்பின் ஆழத்தை, அதன் அருமை உங்களுக்கு புரிய வேண்டியே இதோ அவனைப் பற்றி சிறிது எழுதுகிறேன்.]



துயிலெழுந்து கண் திறக்க எத்தனிக்கும் வேளையில்
எங்கிருந்தோ வந்து என் நினைவில் வந்தமர்வான்

போய் விடு எனக்கு வேலையுண்டு என்று கெஞ்சினால்
தன் அன்பான பார்வையால் என் நெஞ்சை பிளப்பான்

கருப்பனே என்று பாசமாய் நான் அழைத்தால்
வேலையை முடித்து கொடுத்து பேசியே களிப்பான்

அவன் அன்னையின் உடல்நலன் குறித்து விசாரித்தால்
கண்ணீருடன் தம்மிரு அன்னைகளை நினைவு கூர்வான்

அவன் பின்னே சுற்றும் (என்னைத் தவிர) நண்பர்களைப் பற்றி கேட்டால்
தம் பாசப்பிணைப்பை கதையாய் சொல்லி மகிழ்ந்திடுவான்

அவன் சிறுவயது குறும்புகளைக் குறித்து கேட்டால்
என்னருகே வந்தமர்ந்து உற்சாகமாய் கதையளப்பான்

அவன் காதலிகளைப் பற்றி கண்ணடித்து நான் கேட்டால்
அவர்கள் தன்னுடன் என்றும் இருப்பதாய் உருகிடுவான்

என்னை தவிக்கவிட்டு செல்வாயோ என்று அழுதால்
என் கைபிடித்து உன் நட்பு எனக்கு தேவை என்றே தேற்றிடுவான்

பட்டாடை வாங்கிடவே ஆசையுடன் நான் சென்றால்
பணத்தை வீணாக்குகிறாயே என்று காதை கடிப்பான்

அரிதாய் ஏதாவது நான் தர்மம் செய்தால்
முதுகில் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவான்

என் வெள்ளை முடியை கவலையுடன் பார்த்தால்
காலத்தின் தாக்கமே என்று விளக்கம் அளித்திடுவான்

வெகுளியாய் நான் அதிகம் பேசினாலோ
நாக்கை அடக்கு என்று கடிந்து கொள்வான்

என் முட்டாள்தனத்தால் நான் புரியாமல் சினந்தாலோ
உற்சாகமாய் பேசி என்னை சிரிக்க வைப்பான்

மனம் உடைந்து தனிமைப்படும் தருணங்களிலெல்லாம்
கதைகள் பல சொல்லி வாழ்வை புரியவைப்பான்

மகிழ்ச்சியால் நான் தட்டாமலை சுற்றும் நேரங்களில்
என் கைகோர்த்து தானும் ஆடியே களிப்பான்

அவன் செய்யும் சேட்டைகளைப் பற்றி விசாரித்தால்
தன் காதை திருக அழகாக என்னிடம் காட்டுவான்

வம்பு பண்ணும் அவனிடமிருந்து ஒதுங்கினால்
என் கால்பிடித்து மன்னிப்பாய் என்றே கெஞ்சிடுவான்

பிறரின் வார்த்தையம்புகள் கண்கலங்க வைக்கும் தருணங்களில்
என் தோள் பற்றி நான் இருக்கிறேன் உனக்கு என்றே அணைத்திடுவான்

வலிகளால் நான் துடிதுடித்து இறந்துவிட நினைக்கும் சமயங்களில்
என் தலைகோதி கைப்பற்றி பாசத்தை பொழிந்திடுவான்

கடமையும் அன்புமின்றி நான் வாழ்வில் சறுக்கும் நேரங்களில் எல்லாம்
எதிர்ப்பார்பின்றி வெளிப்படையாய் அன்பைப் பொழிந்திடவே உபதேசிப்பான்

நான் மன்னிக்க முடியாத தவறு செய்யும் நேரங்களில்
என்னை வார்த்தைகளால் சாடினாலும் அன்போடு அக்கறை காட்டிடுவான்

தட்டிக்கொடுக்க கரமின்றி நான் தொய்ந்துவிடும் தருணங்களில்
என் தோல்விகளைகூட வெற்றியே என்று கொண்டாடி என்னை மகிழ்விப்பான்

நெஞ்சு வெடிக்கும் துக்கத்தால் நிம்மதியிழந்து தவித்திடும் வேளையில்
என் உணர்வுகளை புரிந்து அறிந்து எனக்காக கண்ணீர் சிந்திடுவான்

இயற்கை சீற்றத்தால் இழந்த உயிர்களை நினைத்து அழுதாலோ
கீதையின் உன்னத உபதேசங்களை எனக்கு உரைத்திடுவான்

எதற்காக மக்களை இப்படி தண்டிக்கிறாய் என்று கேட்டாலோ
அவரவர் பொய்மையே அதற்கு காரணம் என்று தோளை குலுக்கிடுவான்

ஏன் குழலூதுவதில்லை இப்பொழுதெல்லாம் என்று கேட்டாலோ
கேட்க வேண்டுமெனில் உன்னை முதலில் சுத்தப்படுத்தி கொள் என்றே சிரித்திடுவான்

உலக பந்தங்களின் நிலையாமை குறித்து கேள்வியால் துளைத்தாலோ
அறிவை உபயோகித்தாலும் நன்றி மறவாமல் வாழ கற்றுக்கொள் என்றே உரைத்திடுவான்

உன் நிலை நான் அடைவது எப்படி என்று கேட்டால்
விருப்பும் வெறுப்புமின்றி வாழ்ந்திடு என்று கூறி கண்சிமிட்டிடுவான்

நம் நட்பை இவ்வுலகம் தவறாக ஏன் பேசுகிறது என்று ஆதங்கப்பட்டாலோ
ஆத்மாவுக்கு ஆணும் பெண்ணும் இல்லையென்பதை அவர் அறியார் என்பதை புரியவைப்பான்

எப்பொழுதும் எப்படி இப்படி இன்பமாய் இருக்கிறாய் என்று கேட்டாலோ
நானே இறைவன் என்பதை அறியாத பேதையே என்றே கன்னத்தில் தட்டிடுவான்

கனவிலும் கிட்டாத நட்பு என் வாழ்விலா என்றே வியந்தாலோ
உன் நட்பிற்காக நானல்லவோ தவம் செய்தவன் என்றே என்னை நெகிழவைப்பான்

இத்தகைய நட்பை எங்கேனும் கண்டதுண்டா சொல்வீரே
பொய்மையில் கரையாமல் என்னை பாதுகாக்கும் நண்பனை நீங்களும் கண்டீரே

கண்ணை மூடியே உங்கள் கையை அவனிடம் தந்து விட்டு பார்ப்பீரே
எல்லையில்லா அவன் அன்பையும் உணர்ந்து இன்புறுவீரே

கண்ணன், என் குழந்தை

[மதிய வேளையில் ஒரு நாள். தோழிகள் என் வீட்டுக் கதவைத் தட்ட
மெள்ள அடி மேல் அடி வைத்து கதவைத் திறக்கிறேன். கலகலவென சிரித்துக் கொண்டே உள்ளே நுழைபவர்களை அறைக்கு அழைத்து சென்று தணிவான குரலில் பேசுகிறேன். என் குழந்தையை இப்பொழுதுதான் கஷ்டப்பட்டு தூங்க வைத்திருக்கிறேன். இவர்கள் வந்து எழுப்பி விட்டால்..... இதோ நீங்களும் கேளுங்களேன்.)


அமைதியாய் வாருங்கள் எனதருமை தோழிகளே
என் செல்ல மகனை காணுங்கள் தோழிகளே

அழகாய் அவன் தூங்குவதைதான் கண்டீர்களே
இனி இங்கிருந்து அகன்றிடுவோம் ஏற்பீர்களே

வெண்ணெய் திருடன் இன்று என்னிடம் பிடிபட்டான்
அழுது வற்றிய கண்ணீருடன் என்னிடம் வந்தான்

மைவைத்த விழிகளால் என்னைக் கொண்டான்
என் மடிமீது தலைசாய்த்து கண்ணயர்ந்தான்

கேட்க விருப்பமோ அவன் தரும் தொல்லைகளை
என்னை ஆட்டுவிக்கும் கதைகள் கேளுங்கள் இதை

பாலெடுத்து சிந்தாமல் குடி என்றே நான் கூற
சரியென்று மயிலிறகால் பால்கொண்டு படம் வரைகிறான்

பொறுமையாய் அவன் கைபிடித்து குளிக்கவைக்க நான் செல்ல
என்னை நீரால் நனைத்து வேடிக்கை காட்டுகிறான்

அழகான கருமுகத்தில் மைவைத்து நான் அழகு பார்க்க
என் வெண்ணிற கன்னத்தை கருப்பாக்க அவன் அழுகிறான்

அருமையாய் ஆடையுடுத்தி அலங்காரம் நான் செய்ய
நொடிபொழுதில் அழுக்காக்கி அழகுடன் மிளிர்கிறான்

வானத்தையும் பறவைகளையும் நான் கற்றுத் தர
என் முகத்தை அன்புடன் பார்த்து கற்க மறுக்கிறான்

அவனுக்கு பிடித்த உணவை சமைக்க நான் முயல
பின்னிருந்து கட்டியணைத்து என்னை மறக்க வைக்கிறான்

அன்பாய் பாசமாய் அவனுக்கு நான் ஊட்ட அமர
அவனோ முழுங்காமல் என்னை நிலைகுலைய செய்கிறான்

ஒரு மூலையில் நின்று வேகமாக நான் உண்ண முயல
என்னை கண்டுபிடித்து அவனுடன் விளையாட வேண்டுகிறான்

அவனை உறங்க வைத்து நான் குளித்துவிட்டு வந்தாலோ
நெய்யைக் தன் மடிமேல் கொட்டி எனக்கு அதிர்ச்சியூட்டுகிறான்

வீட்டை துடைத்து துடைத்து துப்புறவாக நான் வைத்திருக்க
பிரளயம் வந்ததை போல் அமளி செய்து கலைத்துவிடுகிறான்

அவன் தடுக்கி விழாமல் தரையை துடைத்து வைத்தாலோ
என் பின்னிருந்து மாவு கொட்டி என்னை முட்டாளாக்குகிறான்

என் செல்லத்தை கைபிடித்து பிறர்மனை சென்றாலோ
அங்கும் வம்பு செய்து அனைவரிடமும் திட்டு வாங்குகிறான்

கற்றுக் கொள்ளும் ஆவலில் புத்தகத்தை கையில் எடுத்தாலோ
அணைத்து கொள்ளும்படி என்னை தொந்தரவு செய்கிறான்

அவனை அருகிலமர்த்தி இறைவனை வழிபட்டாலோ
சிரித்து சிரித்து எனக்கே கோபத்தை மூட்டுகிறான்

பூக்களை மாலையாய் தொடுத்து நான் இறைவனுக்கிட நினைக்க
தன் கழுத்தில் போட்டுக் கொண்டு என்னை அழ வைக்கிறான்

கண்ணை மூடி சிறிது நேரம் இசை கேட்க விரும்பினாலோ
தன் புல்லாங்குழலைக் கொண்டு என் காதில் சத்தமிடுகிறான்

என் கண்ணனை வரைய நானும் ஒவ்வொரு முறையும் முயல
அவற்றை கிழித்து தன் முகத்தை காட்டி வெறுப்பேற்றுகிறான்

அவனைப் பற்றி கவிதை எழுத நினைத்து அமர்ந்தாலோ
சத்தமின்றி என்னருகே வந்து அதில் கிறுக்கி வைக்கிறான்

ஏதாவது கற்றுக் கொள்ளடா என்று நான் ஆதங்கப்பட்டாலோ
என் புலம்பலை அலட்சியப்படுத்தி கடகடவென சிரிக்கிறான்

என் கண்மணி தூங்க வேண்டி நான் ஆராரோ பாடப்பாட
தனக்கு மட்டும் கருமை நிறம் ஏன் என்று கேட்டு அழுகிறான்

தொடராய் அவன் கேட்கும் கேள்விகளால் நான் தவிக்க
நான் அவனை கவனிப்பதில்லை என்றே குற்றம் சாட்டுகிறான்

உங்கள் குழந்தைகளும் இப்படித்தான் இருக்கிறார்களா என்ன
நான் மட்டும் தேனீயாய் ஒரு மகனை பெற்றெடுத்தேனா என்ன

இருப்பினும் அவனை திருத்தாமல் அந்த அழகில் மயங்கி விடுகிறேனே
என் குழந்தையின் மேல் உள்ள அன்பினால் குருடாகி விடுகிறேனே

அவனை அடிக்க மட்டும் என்னிடம் சொல்லி விடாதீர்கள்
அவனே என் உயிர் என்பதை மறந்து விடாதீர்கள்

அவனுடைய குறும்புகளால் நான் பலமுறை அழுதவண்ணம் இருக்க
என் கழுத்தைக் கட்டி கன்னத்தில் முத்தமிடும் செல்லம் அவன்

ஷ்ஷ்...... நம் குரலால் எழுந்திடுவான் சீக்கிரம் போய் விடுங்கள்
நானும் சிறிது தியானம் செய்கிறேன் அவனுக்கு நல்லாசி கிடைத்திடவே

என்ன உளறுகிறேன் நான்! அவனல்லவோ நான் வழிபடும் இறைவன்
இருந்தால் என்ன, என் அன்பால் அவனை பிடித்திருக்கிறேன் இறுக்கமாகவே

என் உறவுகள்

இறைவனை அருவமாய் வழிபடுவது என்பது சாதாரண மனிதனால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்பதால், அந்த ஜோதி வடிவான பரம்பொருளை பலர் பலவிதமான பாவங்களை உணர்வுகளைக் கொண்டு உணர்ந்து இன்புறுகின்றனர். அந்த பரமாத்மனுடன் அம்மையாய், அப்பனாய், சகோதரனாய், தோழனாய், குழந்தையாய், குருவாய், கணவனாய், காதலனாய், காதலியாய் நெருங்கிய உறவு கொண்டு ஆத்ம ஞானத்தை அடைபவர் பலர்.

இந்த பாவங்கள் தொன்றுதொட்டு வருபவை. உதாரணத்திற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவனை அன்னையின் வடிவில் பார்த்தார். அவருடைய சீடரான விவேகானந்தரோ சிவன் என்றாலே உருகி விடுவார். மத்வர் விரும்பியது பால கண்ணனை. ஆஞ்சநேயரோ தாச பாவத்தில் தன்னை நிறுத்தி நினைத்து ராம நாமத்தை மட்டும் உச்சரித்தவர். இப்படி அவரவர் மனநிலைப்படி அந்தந்த உறவாய் இறைவனுடன் ஒன்றிவிடுகின்றனர்.

நம் பாரதியார் பலவித பாவங்களை அழகாய் கையாண்டுள்ளார் என்பது உலகறிந்த உண்மை. இப்பாவங்களை அவர் கையாண்டுள்ள விதம் மிக மிக அழகு என்று கூறுவதற்கு கூட எனக்கு தகுதியில்லை. அவர் பின்னே வந்தவர்களிடம் அந்த எழுத்துக்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும். என் கிறுக்கல்களிலும் இருக்கிறது என்று நீங்கள் கூறினால் அது உங்கள் பெருந்தன்மையேயாகும்.

இருப்பினும் பாவங்களை மட்டும் கருத்தில் கொண்டு ஏதோ எனக்கு தெரிந்த கோணத்தில் கிறுக்குகிறேன். கண்ணன் என்னை மன்னிப்பானாக. இனி மேலே.....

Saturday, February 03, 2007

என்னைக் காதலித்துப் பார் – பார்வை இரண்டு

ரகசியமாய் என்னருகே வந்து சிரித்தவனே
ரகசியப் புன்னகைப் புரிந்து மயக்கியவனே
ரகசியமாய் மறைந்து என்னை மறந்தவனே
என் கண்ணீருக்கு விடையளிப்பாய் காதலனே

கவலையின்றி வெகுளியாய் சிரித்தவளே நான்
கவலையாய் உன்நலம் விசாரித்தவளே நான்
கவலையுடன் புலம்பி திரிபளும் நான்
காதலுடன் வாழும் ராதை நான்

காதலை என்னிதயத்தில் மலரச்செய்தவன் நீ
காதலனாய் என்னை விரும்பியவனும் நீ
காதல் இலக்கணம் கற்பித்தவனும் நீ
காதலை உதறிய கண்ணன் நீ

விழிகளால் வடித்த கவிதைகள்தான் எத்தனை
விழிகளோடு சேர்ந்த கணங்கள்தான் எத்தனை
விழிகள் உணர்த்திய காதல்தான் எத்தனை
என் கவிதைகளால் வடித்தவைதான் எத்தனை

எதையும் வேண்டி உன்னிடம் கெஞ்சியதில்லை
எதையும் தேவை என்று கேட்டதில்லை
எதையும் எனதே என்று கூறியதில்லை
என் இதயம் ஏனோ பொய்யுரைப்பதில்லை

மலராய் மணம்வீசி ஏன் வந்தாய்
மலரே என்றே ஏன் விளித்தாய்
மலர்மணம் புரியவே ஏனோ துடித்தாய்
என் வாழ்வில் ஏனோ நுழைந்தாய்

என்னை மறுத்து மறந்தது ஏன்
என்னை ஒதுக்கி துறந்தது ஏன்
என்னை துக்கங்களில் ஆழ்த்தியது ஏன்
என்னையும் காதலித்தது ஏன்