Monday, June 11, 2007

என்னைக் காதலித்துப் பார் – பார்வை மூன்று

அசைந்தாடும் காகிதக் கப்பலில் ஒன்றமர்ந்து
மாற்றமில்லா காதல்கதை பேசிக் களித்திடுவோம்
ராதையே, என்னுடன் பேசிப் பார்

இலையின் விரிப்பில் நானும் நீயும்
கைபிடித்து கண்விரித்து உலகமே உலாவருவோம்
ராதையே, என் கைப்பிடித்துப் பார்

நிழல்களின் குளுமையில் ஒதுங்கி நின்று
நிஜங்களின் உண்மையில் உரக்க சிரித்திடுவோம்
ராதையே, என்னுடன் சிரித்துப் பார்

காவியங்கள் விக்கிசொல்லும் காதலை நகர்த்திவிட்டு
எழுத்துருவின் வளைவுகளில் உணர்ந்து நிற்போம்
ராதையே, என்னிதயத்தை உணர்ந்துப் பார்

பிரிவினால் பொங்கிவரும் விழிநீரின் உள்ளமர்ந்து
பிரிவில்லா வாழ்வதனை வாழக் கற்போம்
ராதையே, என்னுடன் வாழ்ந்துப் பார்

உளிவழியே செதுக்கி வைத்த அன்பினாலே
மதிவதன சித்திரமாய் காலத்தில் உறைந்திடுவோம்
ராதையே, என்னை ஏற்றுப் பார்

புறக்கணித்த கோபத்தில் உன்முகம் சிவக்க
புவியீர்ப்பின் ரகசியம் உணர்த்தவே வந்துள்ளேன்
ராதையே, என்னை ஏறெடுத்துப் பார்

எட்டுதிக்கு லீலைபுரியும் கண்ணனாய் நானிருந்தும்
மௌனமான உன்னைமட்டும் வேண்டி தவமிருப்பேன்
ராதையே, என்னை சிறிது காதலித்துப் பார்

வெற்றிடத்திற்கு என்னைவிட்டு ஓட நினைத்தாலும்
விட்டுச்செல்லா காதலனாய் எங்கெங்கும் நானிருப்பேன்
ராதையே, என்னை மட்டும் சிறிது காதலித்துப் பார்

5 comments:

வேல் சாரங்கன் said...

well, keep it up.

vel.Sarangan,
www.vaanampaadi.blogspot.com

dsampath said...

the expression of krishna of his love and entreating her to love him, experience him and care for him brings an equation to the Radha Krishna relationshp. very unique.. this is how it should be for contemporary times...

Padmaja said...

Yes. Love is expressed in a cheap way nowadays, especially His name is wrongly framed. Love must be soulful, should be beyond body, mind & intellect. Love is whole and is not divisible. Many fail to see and realise this. Thanks for your enlightening comment.

Dr.V.K.Kanniappan said...

நல்ல கவிதை! இனிமை! வாழ்த்துகள். சில இடங்களில் ஏற்படும் ஒற்றுப் பிழைகளை மட்டும் திருத்தினால் நன்றாக இருக்கும்.
உதாரணம்:
கைப்பிடித்துப் பார் - கைபிடித்துப் பார்
உணர்ந்துப் பார் - உணர்ந்து பார்
வாழ்ந்துப் பார் - வாழ்ந்து பார்.

இப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க எண்ணுகிறேன்.

Dr.V.K.Kanniappan said...

அன்புள்ள பத்மஜா,
கீழேயுள்ள இரண்டு இணைப்புகளையும் வாசித்துக் கருத்தளியுங்கள்.

http://www.poemhunter.com/poem/o-radhe-love-me-only-a-little-and-see/
http://allpoetry.com/poem/12403846-O--RadhE---love-Me-Only--A-Little-And-See---by-Valayapatti-Kann

அன்புடன்,
வ.க.கன்னியப்பன்