முத்தமிழ் மன்றத்தில் ஆமையாய், நத்தையாய் நான் இட்ட 2000 பதிவுகளுக்காக எம்மை வாழ்த்திய அன்புள்ளங்களின் வாழ்த்துப்பா படித்து மெய்சிலிர்த்து, கண் நிறைந்து, இதயம் குதூகலித்து, மனம் நிறைந்தது.....
அவை உங்கள் பார்வைக்கு.....
ஆக்கம் - சூரியகாந்தி
பார்க்கும் பரிமாணங்கள் பல்விதம்
ஈர்க்கும் பல்குணங்கள் மெல்லிதம்
இயற்றும் வார்த்தைகள் மெல்லிசை
இயற்றா எண்ணங்கள் பேரோசை!
ஞாலவாழ்க்கையிலும் ஞானதாகம்
காலமெல்லாம் கிருஷ்ணகானம்
கீதையிசைக்கும் கானகத் தேகாந்தகுயில்
கதைத்தாலோ மூங்கில் புல்லாங்குழல்
எதையும் இதமாய் பொறுக்கும் இதயம்
பிறர் துயர்துடைக்க உருகும் இமயம்
அம்புசம் அவர் அன்பே அங்குசம்
பரிவிலே நன்னீரருளும் வெண்மேகம்!
அன்பர்களின் இஷ்டசக்தி உந்துசக்தி
அணைப்பதிலே உ(ஒ)ப்பில்லா நீளகடலலை
அறிவிலே அமைதியான ஆழ்கிணறூற்று
அன்பிலே பொங்கியோடும் அமுதசுரபி!
அன்புக் குளந்தேங்கிய இதயக்கமலமே,
உம்மமல அன்புக் குளமேங்குமே!
ஆக்கம் – இலங்கை பெண்
அன்பு எனும் மூன்றெத்திற்கு
ஆர்வம் எனும் நான்கெழுத்து சேர்த்து
இன்பத்தோடு வலம் வரும் உறவு
ஈதலில் பெரும் மனம் உடையவர்
உண்மையை என்றும் பேசுபவர்
ஊக்கமளிப்பதில் சலிக்காதவர்
என்றும் என் மனதில் இருப்பார்
ஏற்றத்துடன் வாழ்ந்திட வேண்டும்
ஐயமின்றி சொல்லலாம் சாதனை பெண்ணே
ஒற்றுமையை நாளும் கடைப்பிடிப்பவர்
ஓங்கார புன்னகை வீசும் நல்லுள்ளம்
ஔடதமாக எனக்கு அறிவுரை கூறிடும் அக்கா
அஃதே நாளும் வாழ்வில் சாதனைகள் படைக்கட்டும்
ஆக்கம் - ரத்தினகிரி
கவிக்குயிலுக்கு நல்லதாம் வாழ்த்தை
நவில்ந்திடவே விரைந்து வந்தேன்
புவியினில் பொங்கிய அமுதமாய்
கவியினில் சிறந்தார் மங்கைநல்லார்
பாசுரங்கள் போலவே
ஆசுகவி தந்திடுவார்
மாசுஇல் கண்ணனுடன்
பேசு(ம்)வல் லமையுடனே
பணிவிலே பேர் போனவர் கண்ணன்
அணிந்திடும் மணி ஆனவர் மனந்
தணிந்து போமாறு மாகவி சொல்லி
துணிந்து மரணம் வெல்வகை செய்வரே.
ஆக்கம் - காகிதன்
பார்ப்பவர் நெஞ்சத்தை ஈர்ப்பவர் நீங்கள்
பார்வையால் பாசத்தை ஈபவர் நீங்கள்
பாரிலே போரிட பிறந்தவர் நீங்கள்
பார்கடல் முத்துபோல் கிடைத்தவர் நீங்கள்
சாதனை செய்திட பிறந்தவர் நீங்கள்
சாதக சூழலை அமைப்பவர் நீங்கள்
கீதையை கீதமாய் புனைந்தவர் நீங்கள்
பத்மஜா உங்களை வாழ்த்துவோம் நாங்கள்
ஆக்கம் - மூர்த்தி
கீதையைப் பயிற்று வித்த
ஆன்மீக மேதை!
அறிவுக் கண்ணைத்
திறந்திட்ட எங்கள்
மன்றத்துச் சொந்தம்...
சீர்மிகு கவிதைகளை
பார்போற்ற தந்திட்ட
சிந்தனைச் சுரங்கமவர்!...
ஆக்கம் - வெங்கடரங்கன்
பாமாலை சூட்டிட பக்தியோடு வந்திங்கு
உம்மை வணங்கியே பல பக்த உள்ளங்கள்
வாழ்த்தி பாடிச் சென்ற கவியது கண்டு
மெய் சிலிர்க்கிறது மேன்மை கண்டே
வணங்கியே பழகிப்போன என் கைகளுக்கு
வாழ்த்துப்பா எழுதிட வரம் வேண்டி
கண்ணீருடன் கேட்கிறேன்
கண்ணனை எனக்கும் தாருங்கள்
அவன் அருளின்றி அ கூட என்னால்
வரைந்து வைக்க முடியாது
வியக்க வைக்கும் விசயங்கள் சொல்லி
மயக்கம் போக்கிய மாயவனின் தோழியே
தங்களின் நட்பை பெற்றதால்
எங்கள் வாழ்வும் பலன் பெற்றது
எப்போதும் தங்களுடன் பயணிக்கும் பாக்கியம்
எமக்கு அருள்வீராக
வணங்குகிறேன் கண்ணனின் ராதையே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment