Thursday, October 25, 2007

பாதை

சுத்தசங்கீத உராய்வுகளில் நெகிழ்ந்து காது மடல் நாண
தத்தியழைக்கும் குரலதனை கேட்டு மனம் தட்டாமலை சுற்ற
சித்திரமான பாதங்களோ சிலிர்த்து விண்ணை நோக்கிப் பறக்க
நித்தியசுகத் தென்றலால் பட்டுக் கூந்தல் பறக்கக் கண்டேனே

தூயமலை விளிம்பில் நின்று பயமின்றி சரிவினையே ரசிக்க
காயமின்றி உருண்டிடவே இதயம் ஏனோ ஆசையில் ஏங்க
மாயலோக கனவதுவாய் பனியும் விரிந்து படர்ந்து அழைக்க
சாயம்பூசா கன்னங்களும் சிரிப்பில் வெட்கி அசையக் கண்டேனே

கரைகாணா என்னன்பில் குழவியென உள்ளம் பொங்கி மகிழ
தரைதொடாத சொர்க்கத்திலே தனியே உடலோ கரைந்து உறைய
நுரைபொங்கும் நினைவுகளை அன்புடன் கட்டி இறுக்கி விட்டும்
விரைந்து நகராமல் கால்கள் தடுமாறித் துவளக் கண்டேனே

மலைச்சரிவில் என் கதையை ஆவலுடன் தேடுபவரோ
விலைமதிப்பற்ற புதர்களென நகைப்பதை கண்டேனே
சாலையற்ற பயணப்பாதை தடயங்களை என்னுள் வரைந்து
சிலையான பின்னும் என்னுயிர் மட்டும் நடந்திடவே கற்றுள்ளேனே

3 comments:

Latha said...

Very nice Padmaja. Strong words are used and your imaginations are simply great!

Latha said...

Very nice Padmaja. Strong words are used and your imaginations are simply great!

Latha said...

Very nice Padmaja. Strong words are used and your imaginations are simply great!