யார் இந்த கண்ணன்? எனக்கும் அவனுக்கும் உள்ள தோழமையின் ஆழம் தெரிய வேண்டுமா?
கண்மை நான் இடுவதில்லையென
என் கன்னம் பிடித்து இட்டுவிட்டான்
கூந்தலை நான் முடிப்பதில்லையென
என் தோள் பிடித்து முடித்துவைத்தான்
புடவை நான் அணிவதில்லையென
என் உடலை சுற்றி கட்டிவிட்டான்
நகைகள் நான் சேர்ப்பதில்லையென
என் கை பிடித்து போட்டுவிட்டான்
பொட்டிடவே நான் மறப்பதையுணர்ந்து
என் நெற்றிப் பொட்டை அலங்கரித்தான்
கொலுசை நான் தொடுவதில்லையென
என் கால் பிடித்து அணிவித்தான்
நிலைக்கண்ணாடி நான் தவிர்ப்பதனால்
என் முக அழகை திருஷ்டி கழித்தான்
அவன் கருமையில் நான் மயங்குவதால்
என் கருவிழியில் பரவி நின்றான்
ருசியின்றி நான் சமைத்தபோதும்
என் கையால் உண்ண அடம்பிடித்தான்
ரசனையின்றி நான் கவிதையெழுத
என் கைபிடித்து வார்த்தை கோர்த்தான்
தனிமையிலே நான் தவித்திருக்க
என் கைபிடித்து நடத்தி சென்றான்
வழுக்கிவிழ நான் இருந்த தருணங்களில்
என்னை தூக்கிநிறுத்தி கலங்க வைத்தான்
ஆனந்தமாய் நான் பறந்த வேளையில்
என் இதயவீணை மீட்டிவிட்டான்
மேகங்களை நான் விலக்கியதும்
என் முகத்தையே அங்கு நிறுத்திவைத்தான்
கண்ணீரில் நான் மூழ்கியவேளை
என் உப்புநீரை தட்டிவிட்டான்
கடமையில் நான் தடுமாறியபோதோ
என் தலையில் குட்டிவிட்டு முறைத்தான்
மனிதனென நான் இறுமாந்தபோது
என் வாலிபத்தை திருடிவிட்டான்
அறிவாளியென நான் உணர்ந்தநேரம்
என் மூச்சைபிடித்து திணறவிட்டான்
வேதனையில் நான் துடித்தநேரம்
என் தவறுகளை எரித்து விட்டான்
வலிதாளாமல் நான் உறைந்தபோதோ
என்னருகே அமைதியாக அமர்ந்து கொண்டான்
ஒலியில்லா திரைப்படத்தைக் காண்பது போல் உள்ளதா? இத்தனை செய்யும் கண்ணன் என்னுடன் உரையாடுவானா?
அடக்கம் கற்பித்த வாமனன் நீ
அமைதி போதித்த ராமன் நீ
நட்பின் இலக்கண கண்ணன் நீ
பவித்திரம் உணர்த்திய கல்கி நீ
உன் கருமையை காதலிக்க வைத்தவனே
நம் ரகசிய உரையாடலை சொல்லவா
என் சிறுமையை ஏற்றுக் கொண்டவனே
நம் அன்பின் ஆழத்தை எடுத்துரைக்கவா
பதில் தருகிறான்..........
வேத நாதமாய், உன் அபசுவர கீதமாய்
சிற்பியின் உளியாய், உன் நிலமதிரும் நடையாய்
அலையோசையாய், உன் வெட்டிப் பேச்சாய்
அதிர்வலைகளாய் நான் பேசுவதை சொல்லிவிடு
வண்டின் ரீங்காரமாய், மலர் வாசமாய்
தென்றலின் தீண்டலாய், பறவையின் படபடப்பாய்
நீர்வீழ்ச்சி ஓசையாய், மழலைச் சிரிப்பாய்
இயற்கையாய் நான் பேசுவதை சொல்லிவிடு
காலையில் தட்டி எழுப்புவதை சொல்லிவிடு
மாலையில் தட்டி தாலாட்டுவதை சொல்லிவிடு
வேலையில் விரட்டி ஓட்டுவதை சொல்லிவிடு
சேலையில் ஒளிந்து சிரிப்பதை சொல்லிவிடு
உன்னை சீண்டிவிட்டு அழவைப்பதை சொல்லிவிடு
உன்னை ரசிக்கக் கற்றுத் தந்ததை சொல்லிவிடு
உன்னை கவிதையெழுத வைத்ததையும் சொல்லிவிடு
உன்னை கடிந்து மறைவதை சொல்லிவிடு
உன் எண்ணத்தில் பேசுவதை சொல்லிவிடு
உன் சொற்களில் ஒலிப்பதை சொல்லிவிடு
உன் எழுத்துக்களில் எதிரொலிப்பதை சொல்லிவிடு
உன் ரசனைகளில் வெடிப்பதை சொல்லிவிடு
உனக்காக கீதை போதிப்பதை சொல்லிவிடு
உன்னுடன் பல்லுருவில் பேசுவதை சொல்லிவிடு
உன் காலமுழுவதும் உரையாடுவதை சொல்லிவிடு
உன் மௌனமாய் நானிப்பதை சொல்லிவிடு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Wonderful imagination! Nice poem!
Post a Comment