Sunday, February 17, 2008

இரயில் பயணங்களில் – முகம் இரண்டு

பெக்கம் கணக்கா சீவினப்போ
கொஞ்சம் சுமாரா இருந்த மொகம்
ரயிலுல தூங்கி எழுந்து பாத்தப்போ
பேட்டரவுடியா தெரிஞ்சதே சோகம்
படார்னு கால்ல செருப்பப் போட்டு
கண்ணாடி பாத்து சரிசெய்ய போக
சடார்னு குழந்த ஒன்னு ஓடியாந்து
எம் பான்ட புடிச்சு சிரிக்க
எம்மொகத்தக் கண்டும் பயப்படாத
அத்த கொஞ்சம் தூக்கி கொஞ்ச
தடதடன்னு ஓடுற ரயிலுகூட
எங்க சிரிப்ப பாத்து குலுங்க
ஆத்தாகாரி ஓடியாந்து கூப்பிட
மாட்டேன்னு குட்டி தலயதிருப்ப
ஜங்சன்னு வந்துடுச்சுன்னு சொல்லிகிட்டே
குழந்தய புடுங்கிகிட்டு இறங்க
அழுதவனப் பாத்துகிட்டே நின்னப்பதான்
அழகான பொண்ணு ஏறுனதப் பாத்து
முடிய சரிசெய்து முகத்த கழுவி
அந்நியன் அம்பியா ஆக்டுகுடுத்து
ஓரக்கண்ணால அளவெடுத்த நேரத்துல
ரயிலும் சத்தம் போட்டு ஓடத்துவங்க
ஓரமா ஒதுங்கிய பொண்ணு
என்னப் பாத்து சிரிச்சாளே
(எதுக்கு......?)

இரயில் பயணங்களில்...

தடதடவென ஓடும் ரயிலின் வேகத்தில்
நெடுநெடுவென வளர்ந்த மரங்கள் ஓட
சிலுசிலுத்த காற்றின் தாக்கத்தால் சீக்கிரமே
கலகலவென சிரித்த குழந்தைகள் தூங்க
வளவளவென பேசும் பயணிகள் மத்தியில்
நறநறவென பல்லைக் கடித்துக் கொண்டே
படபடவென பொரிந்து தள்ளிய ஒருவர்
மளமளவென ஊற்றெடுத்த மனைவியின் கண்ணீரால்
கசகசக்கும் அம்மதிய வேளையில் எரிச்சலடைந்து
கடகடவென பெட்டிகளின் ஆட்டத்தில் எழுந்து
மசமசவென்று நின்றிருந்தவர்களை கடந்து வந்தவர்
வெடவெடத்த மனைவியின் தவிப்பை உணராது
கணகணக்கும் மனதின் பலவீன உந்துதலால்
நமநமக்கும் வாயை உற்சாகப்படுத்த விரும்பி
சரசரவென்று இரண்டு இழுப்பு புகைவிட்டு
தகதகத்த கோபம் சிறிது அடங்க
விடுவிடுவென தன்னிடம் சென்று அமர்ந்து
திருதிருவென முழித்தவளைக் கண்டு சிரிக்க
பரபரத்து வேகமாய் உணவை பரிமாறினாள்

சுகமான சுகங்கள்



சுட்டு பொசுக்கும் கோடையில
தண்ணி நிறைஞ்ச குளத்துக்குள்ள
குட்டிக்கரணம் போட்ட வேளையில
சில்லுன்னு உற்சாகம் பொங்கிச்சே
இந்த சொகமே சொகம்தானுங்கோ

தூரத்துல நடக்குற சண்டைய
பாக்க துடிக்கற மனச
அடக்கி முடக்கி சொடுக்கி
தொப்புனு குதிச்ச வேகமிருக்கே
இந்த சொகமே சொகம்தானுங்கோ

முத்து குளிக்க போனவுக
மீனு புடிக்க நினச்சவுக
தண்ணி ரொப்ப வந்தவுக
எட்டிநிக்க போட்ட ஆட்டமிருக்கே
இந்த சொகமே சொகம்தானுங்கோ

உச்சிவெயிலு வந்தா என்னா
அம்மா பிரம்பு பாத்தா என்னா
மூக்குசளி புடிச்சா என்னா
கூட்டமா குதிக்கற திரில்லு இருக்கே
இந்த சொகமே சொகம்தானுங்கோ

விடுமுறை முடிஞ்சு போச்சுதே
நட்பும் புத்தகம் பாக்குதே
குளத்த பாத்து ஏங்கியே
நெனச்சு நெனச்சு பாக்குறேன்
இந்த சொகமும் சொகம்தானுங்கோ

அணைப்பில் பக்தி - 2



ஒளிவீசும் பட்டில்லை
மயக்கும் பகட்டில்லை
பிறர்கை பகடையில்லை
வாழ்விலோ பற்றில்லை

கண்களில் காதலுண்டு
கண்ணன் பக்தியுண்டு
கருணையுடன் அணைப்பதுண்டு
கள்ளமின்றி சிரிப்பதுண்டு

பாதகங்கள் மருண்டதுவே
பாவங்கள் மறைந்ததுவே
பாமாலை மலர்ந்ததுவே
பாதங்கள் மகிழ்ந்ததுவே

துக்கம் எமக்கில்லை
துகிலோ தேவையில்லை
துணையின் அவசியமில்லை
துண்டாடும் பார்வையில்லை

கண்ணன் பரதம் எம் நெற்றியில்
கண்ணன் அன்பு எம் கழுத்தில்
கண்ணன் நாமம் எம் நெஞ்சில்
கண்ணன் சேவை எம் கையில்

அன்பின் ஆழம் அவனல்லவா
அகிலம் அவனின் விளையாட்டல்லவா
அனுபவம் அவனின் ஆசிர்வாதமல்லவா
அவனும் நீயும் ஒன்றல்லவா

வம்பான தோசை



ஏண்டி, கறுப்பாயி
புள்ள குட்டி சௌக்கியமா?
வயலாண்ட நாளைக்கு போறப்ப
எங்கிட்ட சொல்லிட்டு போ
நம்ம ரோசா இருக்கால்ல
அன்னிக்கு எங்கிட்ட வந்து
என் தோட்ட கொஞ்சம்
இரவலுக்கு கேட்டா
ஏதோ விசேசம் போகணுமாம்
அவகிட்ட குடுத்துடு சரியா
ஆனா கறாரா சொல்லிபுடு
மூணு நாள்ல திருப்பி குடுக்கணும்னு

ஆமா, கேக்கணும்னு நெனச்சேன்
உங்க பக்கத்து வீட்டு பொண்ணு
ஓடிப் போயி கண்ணாலம் கட்டுச்சே
அது திரும்பி வந்துடுச்சாமே
நீ அத பாத்தியா
தனியா வந்துருக்கா
இல்ல அவனோடவா
இந்த கடய வுட்டு எங்க என்னால
போயி இதெல்லாம் பாக்க முடியுது
சரி சரி இந்தா இன்னும் ஒரு தோச சாப்பிடு

:D :D :D

நூறும் நூறும்




கணக்கில் விட்டேன் நூறை அன்று
வாழ்வில் பிடித்தேன் நூறை இன்று

கண்களால் கண்டது நூறு அன்று
அனுபவத்தால் கடந்தது நூறு இன்று

சுகந்தமென நினைத்தது நூறு அன்று
விஷமாய் மாறியது நூறும் இன்று

கோடிட்டு கோலமிட்டது நூறு அன்று
முகமே கோடானது நூறால் இன்று

என்னழகால் கவரப்பட்டோர் நூறு அன்று
என்னை ஒதுக்குவோர் நூறு இன்று

வேண்டினேன் இறைவனிடம் நூறை அன்று
என்மரணம் வேண்டுவோர் நூறு இன்று

பொருளும் அறிவும் நூறானது அன்று
என்னிடம் இல்லையே நூறு இன்று

கிழவியென அழைத்தேன் பாதிநூறை அன்று
கிழவியெனில் கலங்குகிறேன் நூறில் இன்று

உணர்வுகளால் இறந்தேன் நூறுமுறை அன்று
உணர்வற்று வாழ்கிறேன் நூறைக்கடந்து இன்று

தண்ணீர் சிரிப்பு



மத்தியான வெயிலு சுள்ளுனு வந்துச்சு
மட்ராஸ் தண்ணியும் குழாயில கொட்டுச்சு
மசமசன்னு உட்காற்ர பழக்கம் விட்டுபோச்சு
மடிச்சுகட்டிய சேலயோட ஓடிவர வேண்டியதாச்சு

தண்ணியடிக்கிற புருசன் உதவி செய்யறதில்ல
தண்ணிதூக்க என்னத் தவிர நாதியில்ல
தன்னந்தனியா குடத்த தூக்கி வந்தேனுல்ல
தன்னிலை மறந்த குடங்கள் நிறைய நிக்குதுல்ல

போட்டி போட இங்கதான் ஆளில்ல
பேச்சுல அடிச்சுக்குற கூட்டம் இன்னிக்குல்ல
பேசாத பிள்ளையாருக்கு நன்றி சொன்னேனுல்ல
போகும் போது மனசவிட்டு சிரிச்சேனுல்ல

ஓடியாங்க ஓடியாங்க இங்க ஓடியாங்க
ஓயாம கொட்டுற தண்ணிய புடிச்சுக்கோங்க
ஓசைவருது குழாயெங்கேன்னு கேக்காம வந்துடுங்க
ஓவியம் பின்னாடி இருக்குறத பாத்துடுங்க